கொரோனா நிவாரண நிதியாக 2,07,66,950 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (10.05.2021) தொடங்கி வைத்தார்.
இத்தொகை நியாய விலைக் கடைகள் மூலமாக வரும் 15-ம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை விநியோகிக்கப்படும். இதற்கான டோக்கன் வீடுகள் தோறும் வழங்கும் பணி நேற்று (10.05.2021) தொடங்கி வரும் 12-ம் தேதி வரை நியாய விலைக் கடை பணியாளர்களால் விநியோகிக்கப்பட உள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நோய் தொற்று பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை அதிக எண்ணிக்கையில் பரவியுள்ளது. மேலும், இது நாளுக்கு நாள் தீவிரமாக பரவியும் வருகிறது. இந்த இக்கட்டான பேரிடர் காலத்தில், கொரோனா நிவாரண நிதியை டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொதுமக்கள் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் நேரில் சென்று பெற்றுக்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற செயல்பாடுகள் கடந்த காலங்களில் பின்பற்றப்பட்டுள்ளது. ஆனால், மேற்காணும் இந்த விதிமுறைகளை பொது மக்கள் யாரும் முறையாக பின்பற்றவில்லை. இதனால் மக்கள் அனைவரும் தங்கள் அவசரம் மற்றும் ஆர்வக்கோளாறு காரணமாகவும்; ஒருவேளை முன்கூட்டியே செல்லவில்லை என்றால் நமக்கு பணம் கிடைக்காமல் போய்விடுமோ?!-என்ற ஆதங்கத்தின் விளைவாகவும், நியாய விலைக் கடைகளில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான நபர்கள் குவியத் தொடங்கினார்கள். பல இடங்களில் காவல்துறையினரை வைத்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இன்றைய காலக் கட்டத்தில் இத்தகைய நடைமுறை ‘கொரோனா’ நோய் தொற்றை விலைக்கொடுத்து வாங்கும் முயற்சியாக அமைந்து விடும். எனவே, கொரோனா நிவாரண நிதியை வீடு, வீடாக சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரில் வழங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.
இப்பணியில் நியாய விலைக் கடை பணியாளர்களுடன் இணைந்து வருவாய்துறை அலுவலர்களையும் களப்பணியாற்ற அனுமதிக்க வேண்டும். இப்படி செய்தால், தமிழகம் முழுவதும் உள்ள 2,07,66,950 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 24 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரத்திற்குள் நிவாரண நிதியை முழுமையாக வழங்கிவிடலாம்; மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.
குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை வைத்துக் கொண்டு, சர்வ சாதாரணமாக 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 6,28,69,955 வாக்காளர்களுக்கும் வீடு தேடி சென்று பூத் சிலிப்பை வழங்கி சாதனைப் படைக்கும்போது, இதுவும் நடைமுறை சாத்தியமே. மனமிருந்தால் நிச்சயம் மார்க்கம் உண்டு.
பொறுத்திருந்துப் பார்ப்போம்.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com