அவுரி என்றும்; நீலி என்றும் அழைக்கப்படும் செடியிலிருந்து நீண்ட காலமாக நீல நிறம் (ஊதா நிறம்) கொண்ட சாயம் எடுத்தனர். புதர் வகையை சேர்ந்த இச்செடி ஏறத்தாழ 2 மீட்டர் வளரக்கூடியது. வானியல் சூழலைப் பொறுத்து இப்புதர்ச்செடி ஆராண்டுத் தாவரமாகவோ, ஈராண்டுத் தாவரமாகவோ, நிலையாக இருக்கும் தாவரமாகவோ உள்ளது.
இச்செடியின் இலைகள் சற்றே வெளிறிய பச்சை நிறத்துடன் கூட்டிலையாக உள்ளன. இதன் பூக்கள் நீலம் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளன. இச் செடியின் இலைகளை நீரில் ஊற வைத்து புளிக்கச்செய்து சாயத்தை எடுக்கின்றனர். இப்படி புளிக்க வைப்பதால் அதில் உள்ள கிளைக்கோசைடு இண்டிக்கான் என்னும் பொருள், ஊதாச் சாயமாக மாறுகின்றது. இந்தச் சாயத்தின் பெயர் இண்டிகோட்டின் என்னும் ஊதாச்சாயம் ஆகும்.
அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த தாவர இலையிலிருந்து கிடைக்கும் கருநீல (இண்டிகோ) சாயத்திற்கு, அபாயகரமான லேசர் கதிர்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கும் தன்மை இருப்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். லேசர் கதிர்களைத் தடுக்கும் ஒளியியல் வரம்புகளை உருவாக்க இது பயன்படக்கூடும்.
பெங்களூருவைச் சேர்ந்த ராமன் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் கென்ஸ்ரீ பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த இயற்கை கருநீல சாயத்தின் ஒளியியல் தன்மைகள் பற்றி ஆய்வு செய்து, லேசர் கதிர்களிலிருந்து மனித கண்களைப் பாதுகாக்கும் கருவியாக செயல்படும் திறனை இந்த சாயம் பெற்றிருப்பதைக் கண்டறிந்தார்கள்.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சி, ‘ஆப்டிகல் மெட்டீரியல்ஸ்’ என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளாக துணிகளுக்கு இயற்கை முறையில் வர்ணம் தீட்டுவதற்கு இந்த வகையான சாயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிவியல் ஆய்வகங்களில் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தாவரத்தின் இலைகளிலிருந்து தற்போது இந்த சாயம் பெறப்படுகிறது.
முக்கிய குறிப்பு:
அவுரி இலை சாறு பாம்புக்கடிக்கு முதலுதவியாகவும், மஞ்சள் காமாலை, தோல் நோய்கள் மற்றும் ஒவ்வாமைக்கு (அலர்ஜி) மருந்தாகவும் பல நூற்றாண்டுகளாக இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com