குடி போதையில் வந்த வியாபாரி மீது கொலை வெறித் தாக்குதல்!-மக்களுக்கு காவலாளியாக இருக்க வேண்டிய சிறப்பு உதவி ஆய்வாளர் கொலையாளியாக மாறிய கொடூரம்!-மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.

உயிரிழந்த முருகேசன்.

குடி போதையில் வந்த வியாபாரி மீது, வாகனச் சோதனை என்ற பெயரில் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதால், மக்களுக்கு காவலாளியாக இருக்க வேண்டிய காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர், தற்போது கொலையாளியாக மாறிய கொடூரம், தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். வியாபாரியான இவர், இடையபட்டி- வாழப்பாடி சாலையில், மளிகை மற்றும் பழக்கடைகள் நடத்தி வந்தார்.

குடிப்பழக்கமுடைய இவர், நேற்று (22.06.2021) கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, வெள்ளிமலைப் பகுதிகளில் மது அருந்தி விட்டு, மீண்டும் தன் நண்பர்களோடு இதே வழித்தடத்தில் திரும்பி வந்துள்ளார்.

இந்நிலையில், கல்வராயன் மலை அடிவாரம், பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச் சாவடி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், வியாபாரி முருகேசன் மற்றும் இவரது நண்பர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது குடி போதையில் இருந்த வியாபாரி முருகேசன் தரப்பிற்கும், அங்கு பணியில் இருந்த காவல் துறையினருக்கும் ஏற்பட்ட வாய் தகராறில், ஆத்திரமடைந்த ஏத்தாப்பூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி, தனது கையில் வைத்திருந்த (கம்பு) தடியால், வியாபாரி முருகேசனை கடுமையாக தாக்கினார்.

“சார், சார் அடிக்காதீங்க விடுங்க சார்; சார், சார் அடிக்காதீங்க விடுங்க சார்” என்று அருகில் இருந்தவர்கள் தடுத்தும்கூட, சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமிக்கு ஆத்திரம் குறையவில்லை. தனது கொலை வெறித் தாக்குதலை தொடர்ந்தார். இதில் கீழே விழுந்த முருகேசனின் தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது. முருகேசன் மயக்கமானார்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், முருகேசனின் உடல் நிலை மோசமடைந்ததால், இன்று (23.06.2021) அதிகாலை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது‌ முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையில், ‘பாலிமர் நியூஸ்’ தொலைக்காட்சியில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து, இதுக்குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நான்கு வாரத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறு, சேலம் சரக காவல் துறை துணைத் தலைவருக்கு (Deputy Inspector General of Police) இன்று (23.06.2021) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தலைமையிலான காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து விரிவான விபரங்களை பெறுவதற்காக, வாழப்பாடி காவல் துறை துணைக் கண்காணிப்பாளரை பல முறை அலைபேசியில் நாம் தொடர்பு கொண்டோம். தான் முக்கிய வேலையாக இருப்பதாகவும், இதுக்குறித்து ஏத்தாப்பூர் காவல்நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு இன்று (23.06.2021) இரவு 09:12 மணிக்கு அவர் நம்மிடம் கூறினார்.

இதையடுத்து, உடனே ஏத்தாப்பூர் காவல்நிலையத்தை நாம் தொடர்புக் கொண்டோம். இச்சம்பவம் குறித்து வழக்கு (327/2021) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN June 24, 2021 2:42 pm

Leave a Reply