பெருமாள் நிலத்தால் வந்த பிரச்சனைகளும்..!- மருத்துவர் சுப்பையா கொலை வழக்கின் தீர்ப்புரையும்!-சிவில் – கிரிமினல் ஆன விவகாரம்!-கூலிப் படையினரால் சீரழிந்த குடும்பம்.

மருத்துவர் சுப்பையா.

அரசு நரம்பியல் துறை மருத்துவர் சுப்பையாவின் பூர்விகம், கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு. சுப்பையாவின் தாய்மாமன் பெருமாளுக்கு காது, வாய் செயலிழந்து விட்டதோடு; குழந்தையும் இல்லை. இந்த நிலையில், அன்னப்பழம் என்பவரை இரண்டாம் தாரமாக அவர் திருமணம் செய்துகொள்கிறார். திருமணமான சிறிது காலத்திலேயே பெருமாளை உதறிவிட்டு அன்னப்பழம் போய்விடுகிறார்.

அதன் பின்பு சுமார் மூன்று வருடங்கள் கழித்து கையில் ஒரு குழந்தையுடன் திரும்பி வந்துள்ளார். ‘தனக்கும் குழந்தைக்கும் சொத்தில் பங்கு வேண்டும்’ என்று அன்னப்பழம் பிடிவாதம் பிடிக்க, இதை ஏற்க மறுத்த பெருமாள், தனது சொத்தையெல்லாம் தன் சகோதரி அன்னக்கிளியின் பெயரில் எழுதி வைத்துவிடுகிறார். அதில் ஒன்றுதான் அஞ்சுகிராமத்தில் உள்ள இரண்டேகால் ஏக்கர் நிலம்.

இந்தச் சொத்து யாருக்குச் சொந்தம்?! என்பது தொடர்பாக அன்னப்பழத்தின் மகன் பொன்னுசாமிக்கும், அன்னக்கிளியின் மகன் மருத்துவர் சுப்பையாவுக்கும் பெரும் பிரச்சனை உருவானது. பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கும் நடத்தி வந்த நிலையில். அந்த நிலத்தை தன் மனைவி மேரி புஷ்பத்தின் பெயரில் பொன்னுசாமி செட்டில்மென்ட் எழுதிக் கொடுக்கிறார்.

2013-ம் ஆண்டு அரசு மருத்துவர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற சுப்பையா, ந்த நிலத்தை மீட்டெடுக்கும் பணியில் முழுமூச்சாக இறங்குகிறார்.

அப்போது தமிழ்நாடு அரசால் புதிதாக அமைக்கப்பட்டிருந்த நில அபகரிப்புப் பிரிவில் புகார் அளித்ததுடன், நீதிமன்றத்தையும் நாடுகிறார்.

இந்த நிலையில்தான் 14.09.2013 அன்று மாலை 5.00 மணியளவில், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பில்ரோத் மருத்துவமனை அருகில், பிரதான சாலையில் மருத்துவர் சுப்பையா கூலி படையினரால் சரமாரியாக வெட்டப்படுகிறார். இதில் மருத்துவர் சுப்பையாவின் தலை, கழுத்து, தோள்பட்டை, வலது முன்கை ஆகிய பகுதிகளில் பல வெட்டு காயங்கள் விழுந்தன.

உடனடியாக பில்ரோத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவர் சுப்பையா; 23.09.2013 அதிகாலை 1.00 மணியளவில் பலியானார்.

இவ்வழக்கில் பொன்னுசாமியும், அவரின் மனைவி மேரி புஷ்பமும் கைது செய்யப்பட்டனர். பொன்னுசாமியின் மகன்கள் வழக்கறிஞர் பேசில், பொறியாளர் போரிஸ் இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பேசிலின் நண்பர்களான வழக்கறிஞர் வில்லியம்ஸ், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் அனைவரும் பின்னாளில் கைதுசெய்யப்பட்டனர்.

2015-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்கு ஆமை வேகத்தில் நடைப்பெற்று வந்தது. 2017-ம் ஆண்டில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக விஜயராஜ் வந்த பிறகுதான் சாட்சிகள் விசாரணை சூடுபிடித்தது. அப்ரூவராக மாறிய ஐயப்பன் அளித்த வாக்குமூலம்தான் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக மாறியது.

இந்த வழக்கில்தான் 7 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி நேற்று (04.08.2021) தீர்ப்பு வழங்கியுள்ளார். ஐயப்பன் அப்ரூவர் ஆகிவிட்டதால் அவர் அரசு சாட்சி. ஆகவே, அவருக்குத் தண்டனை எதுவும் கிடையாது.

235 பக்கங்கள் கொண்ட இந்த வழக்கின் தீர்ப்புரை, நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

Dr.Subbiah-murder-case-judgement

வழக்கின் முடிவு பற்றி எனக்கு மகிழ்ச்சியோ; வருத்தமோ இல்லை. என் பணியை நான் நன்றாகவே செய்துள்ளேன்!-அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் விஜயராஜின் வாக்கு மூலம்.

தமிழக அரசுக்காக, சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞராக பல வழக்குகளை நடத்தி கொடுத்து இருக்கிறேன். இன்றும் பல முக்கிய வழக்குகளை நடத்தி வருகிறேன்.

MGR விஜயன் கொலை வழக்கு, புத்தூர் காவல் நிலைய கொலை வழக்கு, தளி சேர்மன் வெங்கடேசன் கொலை வழக்கு, ஆயில்பட்டி செல்லக்குட்டி கொலை வழக்கு, கீழ திருப்பாலகுடி தமிழ்ச்செல்வன் கொலை வழக்கு என்று எத்தனையோ பல சவாலான கொலை வழக்குகளை நடத்தியுள்ளேன், அனைத்திலும் ஆயுள் தண்டனை கிடைத்து உள்ளது.

ஆனால், நான் நடத்திய Dr. சுப்பைய்யா கொலை வழக்கு மிக சிக்கலான அதே சமயத்தில் சவாலான ஒரு வழக்கு. என்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட மிக முக்கிய வழக்கு. இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட 10 பேர்களில் 2 பேர் வழக்கறிஞர்கள், 2 பேர் ஆசிரியர்கள், ஒருவர் அரசு மருத்துவர், ஒருவர் பொறியாளர் மற்றவர்கள் டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள். வழக்கு நடைபெற்ற காலத்தில் ஒருவர் அப்ருவர் ஆகிவிட்டார்.

பல இழுத்தடிப்புகள், சாட்சிகள் மிரட்டபடுதல் என நீண்டு கொண்டே இருந்த இந்த வழக்கு உயர்நீதிமன்ற உத்தரவால், கொரோனா காலத்திலும் இந்த ஒரு வழக்கு மட்டும் நேரடி விசாரணை முறையில் தினம்தோறும் நடைபெற்றது.

மரியாதைக்குரிய மூத்த வழக்கறிஞர்கள் பலர் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்காக ஆஜரான வழக்கு. பல நாட்கள் நான் வாதாடிய வழக்கு. குற்றம் சாட்டபட்ட நபர்களுக்காக ஆஜரான சட்ட நிபுணர்களோடு கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக போராடி, வாதம் செய்து என் அறிவை வளர்த்து கொண்ட வழக்கு.

சிறிய சிறிய விஷயத்திற்கே உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற படிகளை தொட்ட வழக்கு. என்னை அதிகமாக படிக்க வைத்த, சோதித்த, கஷ்டப்பட வைத்த வழக்கு. உண்மையில் நான் பல விஷயங்களை கற்று கொண்ட வழக்கு.

57 அரசு சாட்சிகள், 173 அரசு தரப்பு ஆவணங்கள், 42 அரசு தரப்பு சான்று பொருட்கள், 3 எதிர்தரப்பு சாட்சிகள், 7 ஆவணங்கள், 410 கோர்ட் விசாரணை நாட்கள்….என்று நீண்ட, நெடிய சட்ட போராட்டங்களை கடந்த இந்த வழக்கில் 04-08-2021 சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி திருமதி. S.அல்லி அவர்கள், குற்றம் சாட்டபட்ட 7 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை, 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

வழக்கின் முடிவு பற்றி எனக்கு மகிழ்ச்சியோ (அல்லது) வருத்தமோ இல்லை. என் பணியை நான் நன்றாகவே செய்துள்ளேன் என்ற மனத்திருப்தி மட்டும் உள்ளது.

Dr. சுப்பையா கொலை வழக்கில் Spl.P.P யாக என்னை நியமிக்க பரிந்துரை செய்த I.G திரு.சங்கர் IPS அவர்களுக்கும், நியமித்த தமிழக அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

மேலும், சென்னை மாநகர ஆணையாளர் திரு.சங்கர் ஜூவால் IPS, Int IG, East Zone JC Mylapore DC, உதவி ஆணையாளர் திரு. சுப்ரமணியன், இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளான ஆய்வாளர்கள் திரு. ஸ்ரீனிவாசன், திரு. ராஜேஷ் கண்ணா, திரு. இளங்கோவன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

வழக்கு நடைபெற்ற நாட்களில் என்னுடன் இணைந்து பணியாற்றிய ஆய்வாளர்கள் அஜூகுமார், சப்இன்ஸ்பெக்டர்கள் திரு. துளசிதாஸ், திரு. பார்த்தசாரதி மற்றும் காவல்துறையை சேர்ந்த ராஜன், பிரதாப், சுகன்யா ஆகியோர்களுக்கும், சீனியர் வக்கீல்கள் முரளிதரன், தங்கபாண்டியன், விக்டர் அருள்ராஜ் மற்றும் எனது அலுவலக ஜூனியர்கள் மற்றும் சீனியர்கள் குறிப்பாக பாலாஜி, ஈஸ்வர், சந்திரசேகர், தமிழ்ச்செல்வன், சுப்பிரமணி, குமார், பிரியா, திருமுருகன், ஹேமந்த், வித்யா, முருகவேல், பாஸுல், கிஷோர், வேலாயுதம், லோகேஷ் மஞ்சுளா அனைவருக்கும், நிழல் போல் என்னுடன் இருந்து உதவிய அரவிந்த்பாண்டியன், ஜெய்குமார் ஆகியோருக்கும் என் நன்றிகள்.

திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் காவல்துறை அதிகாரிகள் வேண்டுகோள் அடிப்படையில் சிறப்பு வழக்குகள் மட்டுமே நடத்திய/நடத்தும் நான், அதிமுக ஆட்சியில் வெடிகுண்டு வழக்குகள் சிறப்பு நீதிமன்றதில் உள்ள அனைத்து வழக்கிலும் Spl.P.P யாக நியமிக்கபட்டேன்.

இறுதி கட்டத்தில் இன்னும் சுமார் 20 சிறப்பு வழக்குகள் இருந்தாலும், சில தனிப்பட்ட காரணங்களால் என்னை அரசு பணியில் இருந்து விடுவித்து கொள்ள இருக்கின்றேன். அடுத்த வாரம் ஒரு தீர்ப்பு வர இருக்கிறது, அத்துடன் எனது அரசு பணி முடிவடைகிறது.

இவ்வாறு சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர் என்.விஜயராஜ் தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ, பெருமாள் நிலத்தால் வந்த பிரச்சனையால், சிவில் – கிரிமினல் ஆனது; கூலிப் படையினரால் ஒட்டுமொத்த குடும்பமும் சீரழிந்து செயலிழந்து போனது.

இதுப்போன்ற நிலை எதிர்காலத்தில் யாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் இச்செய்தின் உண்மையான நோக்கம்.

-Dr.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply