தவிக்கும் மாணவர்கள்!- கல்லூரி விடுதிகளை அதிகரிக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.

தமிழ்நாடு முழுவதும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரும்பிய கல்லூரியில், விரும்பியப் பாடப்பிரிவில் இடம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ள மாணவர்கள், தங்கிப் படிக்க விடுதிகளில் இடம் கிடைக்காததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த ஜூலை 27&ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் சராசரியாக 90% இடங்கள் நிரப்பப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள இடங்களும் அடுத்த சில நாட்களில் நிரப்பப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துக் கல்லூரிகளிலும் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளும் தொடங்கப்பட்டு விட்டன. ஆனால், பெரும்பான்மையான மாணவர்களுக்கு விடுதிகளில் இடம் கிடைக்காததால் அவர்களால் வகுப்புகளுக்கு செல்ல முடியவில்லை.

கல்லூரிக் கல்வி இயக்குனரின் அனுமதி பெற்று கூடுதல் இடங்களில் மாணவர்களைச் சேர்க்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதால் அதிக எண்ணிகையில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தொலைதூரப் பகுதிகளையும், போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களையும் சேர்ந்த மாணவர்கள் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களால் வீட்டிலிருந்து தினமும் கல்லூரிகளுக்கு சென்று திரும்புவது சாத்தியமில்லாத ஒன்றாகும். அவர்களுக்கு தங்குமிட வசதி செய்து தரப்படாவிட்டால், அவர்களில் பெரும்பான்மையினரால் கல்லூரிக் கல்வியை தொடர முடியாமல் போய்விடும். உயர்கல்வி மாணவர் சேர்க்கையை அதிகரித்தது, கூடுதல் இடங்களை எற்படுத்தியது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டதன் நோக்கமே நிறைவேறாமல் போய்விடும்.

அரசு கல்லூரி மாணவ, மாணவியருக்கு விடுதிகளில் இடம் கிடைக்காமைக்கு திட்டமிடலில் தொலைநோக்கு இல்லாமையும், காலச்சூழலுக்கு ஏற்ற வகையில் விதிகள் மாற்றப்படாததும் தான் காரணம். தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறை சார்பில் 1099 பள்ளி மாணவர் விடுதிகள், 255 கல்லூரி விடுதிகள் என மொத்தம் 1354 விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் கல்லூரிகளுக்கான விடுதிகள் பெரும்பாலும் மாவட்டத் தலைநகரங்கள், சில பத்தாண்டுகளுக்கு முன்பு அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்ட நகரங்கள் ஆகியவற்றில் மட்டும் தான் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்குக்கும் கூடுதலாகி விட்டது. 2013&ஆம் ஆண்டில் 69 ஆக இருந்த அரசு கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கை இப்போது 143 ஆக அதிகரித்திருக்கிறது.

ஆனால், அதற்கேற்ற வகையில் கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி அண்மைக்காலங்களில் தொடங்கப்பட்ட கல்லூரிகள் பெரும்பாலும் கிராமப்பகுதிகளில் அமைந்துள்ளன. அதேநேரத்தில், கல்லூரி விடுதிகள் பெரும்பாலும் நகரப்பகுதிகளில் தான் அமைந்துள்ளன. அதுவும் கல்லூரிகளில் இருந்து வெகுதொலைவில் அமைந்திருப்பது தான் சிக்கலுக்கு காரணமாகும். வேறு சில விடுதிகள் கல்லூரிகளுக்கு அருகில் அமைந்திருந்தாலும் கூட, கல்லூரியும், விடுதியும் வேறு வேறு மாவட்டங்களில் இருப்பதாகக் கூறி விடுதிகளில் இடம் மறுக்கப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எடுத்துக்காட்டாக பெரும்பாக்கம் அரசு கல்லூரி சென்னை மாநகர எல்லைக்குள் அமைந்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள மாணவர் விடுதியிலிருந்து இந்தக் கல்லூரிக்கு நகரப் பேருந்தில் மாணவர்கள் இலவசமாக சென்று விட முடியும். ஆனால், அரசு கல்லூரி அமைந்துள்ள பெரும்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பதாகக் கூறி, அந்தக் கல்லூரி மாணவர்களை சேர்த்துக் கொள்ள கிண்டி மாணவர் விடுதி நிர்வாகம் மறுக்கிறது. பெரும்பாக்கம் கல்லூரி மாணவர்கள் செங்கல்பட்டு விடுதியிலிருந்து கல்லூரிக்குச் செல்ல குறைந்தது 3 மணி நேரம் பயணிக்க வேண்டும். இது சாத்தியமற்றது ஆகும்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் பல இடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட எல்லைகள் குறித்த நிபந்தனைகளை தளர்த்தி எந்த அரசுக் கல்லூரி மாணவரும், எந்த விடுதியிலும் சேர்க்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தால் இந்த சிக்கலை 70% தீர்த்து விடலாம். அருகில் விடுதிகளே இல்லாத கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை, தற்காலிக ஏற்பாடாக, அருகிலுள்ள தனியார் விடுதிகளில் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்;

இத்தகைய கல்லூரிகளை கணக்கெடுத்து அவற்றுக்கு அருகில் புதிய மாணவர் விடுதிகளை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கல்லூரிகளில் சேர்ந்த அனைத்து மாணவர்களும் படிப்பை முடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply