இரவு நேரத்தில் இடிந்து விழுந்த தொகுப்பு வீடு!-மயிரிழையில் உயிர் தப்பிய மனிதர்கள்!-தூத்துக்குடியில் நடந்த துயரம்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம், படுக்கைப்பத்து கிராமத்தில் வசித்து வரும் கணவனை இழந்த வயதான பெண்மணி புஷ்பம் (வயது 68), இவரது மகன் கனகராஜ் (வயது 42), இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடு; மிகவும் சேதமடைந்து மேற்கூரை கான்கிரீட் பகுதிகள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் இருந்து வந்தது.

இந்நிலையில், இடிந்து விழும் நிலையில் இருந்த இந்த ஆபத்தான வீட்டை, பழுதுப்பார்ப்பதற்கு உதவும்படி சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், படுக்கைப்பத்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சாத்தான்குளம் வட்டாட்சியரிடமும் பலமுறை கோரிக்கை மனுக் கொடுத்துள்ளனர்.

ஆனால், நேற்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இன்று (16.09.2021) அதிகாலை 1.30 மணியளவில் அந்த வீடு திடீரென பயங்கர சப்தத்துடன் இடிந்து விழுந்துள்ளது. வயதான பெண்மணி புஷ்பம் சமையல் செய்யும் பகுதியிலும், இவரது மகன் கனகராஜ் வீட்டிற்கு வெளிப் பகுதியிலும் தூங்கிக் கொண்டிருந்ததால், அதிஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினார்கள்.

வீடு இடிந்து விழுந்தது குறித்து, படுக்கைப்பத்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் என்பவரிடம், வீட்டு உரிமையாளர் அலைபேசி மூலம் தகவல் தெரிவித்தும், இன்று (16.09.2021) மாலை 5.30 மணிவரை சம்பவ இடத்தை கிராம நிர்வாக அலுவலர் பார்வையிட வரவில்லை.

இதுக்குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளான வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு படுக்கைப்பத்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் தகவல் தெரிவிக்கவும் இல்லை.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து இன்று (16.09.2021) மாலை 5.32 மணிக்கு படுக்கைப்பத்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த்தை தொடர்புக் கொண்டு நாம் விபரம் கேட்டோம்.

வீடு இடிந்து விழுந்தது குறித்து தனக்கு உடனே தகவல் கிடைத்ததாகவும், சம்பவம் இடத்தை இன்னும் நேரில் பார்வையிடவில்லை என்றும், இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பவில்லை என்றும், உண்மையை அவர் ஒத்துக்கொண்டார்.

இந்நிலையில், வேறுவழியில்லாமல் இன்று (16.09.2021) மாலை 6.20 மணியளவில் படுக்கைப்பத்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளரை 9445008155 என்ற அலைபேசியில் நாம் இன்று (16.09.2021) மாலை 7.47 மணியளவில் தொடர்புக் கொண்டு, நடந்த விபரங்களை தெரிவித்தோம். விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் நம்மிடம் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகிய இரண்டுபேர் மட்டும் நேர்மையாக இருந்து எந்த பிரயோசனமும் இல்லை. தலையாரி (கிராம உதவியாளர்) முதல் தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள் வரை அனைவரும் தங்கள் கடமைகளை நேர்மையாக செய்தால் மட்டுமே, மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும்; இந்த ஆட்சிக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்விசியத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply