பொது இடங்களில் உள்ள சிலைகள் அனைத்தையும் 3 மாதங்களில் அகற்ற வேண்டும்! -தலைவர் சிலைகளைப் பூங்காவில் வைத்து பராமரிக்க வேண்டும்!- தேசத்திற்காக தியாகம் செய்த தலைவர்களை சாதி ரீதியாக அடையாளப்படுத்தக் கூடாது!-சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் அளித்த உத்தரவின் உண்மை நகல்.

Hon’ble Thiru. Justice S.M.SUBRAMANIAM.

தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும்; தலைவர் சிலைகளைப் பூங்காவில் வைத்து பராமரிக்க வேண்டும்; தேசத்திற்காக தியாகம் செய்த தலைவர்களை சாதி ரீதியாக அடையாளப்படுத்தக் கூடாது; இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவுசெய்துள்ளோம்.

chc

வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகா, கோனுர் கண்டிகை கிராமத்தில் உள்ள மேய்கால் புறம்போக்கு நிலத்தில், அம்பேத்கர் சிலை நிறுவ பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளதால் சிலையை அகற்ற தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரராகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நெடுஞ்சாலைகளில் சிலைகள் வைக்க கூடாது என உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சிலையை அகற்றியதில் எந்தத் தவறும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சட்ட விதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என தெரிவித்த நீதிபதி, தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், அரசு நிலங்கள், பொது சாலைகள், மேய்கால் புறம்போக்கு ஆகிய இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், பொதுமக்களின் உரிமைகளைப் பாதிக்காத வகையில் சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக விரிவான விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தலைவர் பூங்கா உருவாக்கி, சாலைகள் மற்றும் பொது இடங்களில் இருக்கும் தலைவர் சிலைகளைப் பூங்காவில் வைத்து பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, சிலைகளைப் பராமரிப்பதற்கான செலவுகளை சிலை வைக்க அனுமதி பெற்றவர்களிடம் வசூலிக்க வேண்டும் எனவும் சிலைகள் பராமரிப்பு தொகை செலுத்தாதவர்களிடம் இருந்து அத்தொகையை வசூலிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அரசியல் கட்சிகள், மதம், சாதி, மொழி சார்ந்த அமைப்புகள் தங்கள் விருப்பப்படி சிலைகளை அமைப்பதாக குற்றம்சாட்டிய நீதிபதி, தலைவர்கள் சிலைகளை வைக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அதே சமயம் பொது இடங்களில் சிலைகளை வைக்கக்கூடாது என தெரிவித்தார். சிலைகள் தாக்கப்பட்டு சட்ட ஒழுங்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, தலைவர்கள் பிறந்தநாள், நினைவு நாள் நேரங்களில் நடைபெறும் நிகழ்வுகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார்.

சமுதாயத்திற்காக தியாகம் செய்த தலைவர்களை எந்த ஒரு தருணத்திலும் சாதி ரீதியாக அடையாளப்படுத்தக் கூடாது. அதை அவர்கள் கற்பிக்கவில்லை என்றும்; தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

பல இடங்களில் சிலைகள் பராமரிக்கப்படுவதில்லை என்றும், சிலைகள் சேதப்படுத்தப்படுதல், அவமரியாதை செய்தல் போன்ற செயல்களால் வன்முறை வெடிப்பதாகவும், இதை அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

ஆட்சி அதிகாரத்துக்கு வரும் கட்சி, தங்கள் தலைவர்களின் சிலைகளை வைப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தனியார் இடங்களில் சிலை வைப்பது அவர்களின் விருப்பம் என தெரிவித்த நீதிபதி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை திறமையாக அமல்படுத்தாததால்தான் சில இடங்களில் பதற்றமான சூழ்நிலை உருவாவதாக குற்றம் சாட்டிய நீதிபதி, மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு பல ஆண்டுகளாக நிலவும் சாதி மோதல்களைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பொது இடங்கள், சாலைகளில் சிலைகள் வைப்பதைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் மக்கள் மனதில் தற்போது நிலவும் அச்சத்தைப் போக்க முடியாது என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply