கடமையை செய்த காவலரை ஆபாசமாக திட்டி கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உதவியாளர்!-திருச்செந்தூரில் நடந்த விபரீதம்! -உண்மையில் நடந்தது என்ன?!-உள்ளது உள்ளப்படி…!

தலைமை காவலர் என்.முத்துக்குமார்.

தலைமை காவலர் என்.முத்துக்குமார்.

AR-copy-of-HC-Muthukumar

Muthukumar-HC166

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாகரன்.

தமிழ்நாடு அமைச்சரவையில் மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாகரன் என்பவர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் பயன்பாட்டுக்கு, தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள (பதிவு எண் TN 43 G 8969) காரை, அக்டோபர் 18- ந்தேதி காலை டிரைவர் குமார் என்பவர் ஓட்ட, அதில் அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன் அமர்ந்து வந்துள்ளார்.

ஹோட்டல் மணி அய்யர்-திருச்செந்தூர்.

திருச்செந்தூர் ஹோட்டல் மணி அய்யர் முன்பு சாலையில் காரை நிறுத்திவிட்டு, டிரைவர் குமார் அதே காரில் அமர்ந்து இருக்க; அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன் மட்டும், ஹோட்டல் மணி அய்யர் மாடியில் இருக்கும் லாட்ஜிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைச்சரின் கார் நின்றதால், சிறிது நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு; வாகன ஓட்டிகள் அனைவரும் ”ஹாரன்” அடிக்க, சிறிது நேரம் போக்குவரத்து தேக்கம் ஏற்பட்டது.

தான் அமர்ந்து இருக்கும் காரால்தான் இத்தனை இடையூறு என்று தெரிந்தும், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல், அமைச்சரின் கார் டிரைவர் குமார் அலட்சியமாக காரில் அமர்ந்திருந்தார்.

அப்போது மணி அய்யர் சந்திப்பில் அங்கு போக்குவரத்து ஒழுங்கு பணியில் தலைமை காவலர் என்.முத்துக்குமார் (HC-106) என்பவர் இருந்தார்.

அப்போது அங்கே வந்த தலைமை காவலர் என்.முத்துக்குமார்; போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற அமைச்சரின் காரை அங்கிருந்து எடுக்கும்படி கார் டிரைவர் குமாரிடம் சொல்ல; எடுக்க முடியாது; உன் வேலையை பார்!- என்று கார் டிரைவர் குமார் அலட்சியமாக சொல்ல; என் வேலையே இதுதான் என்று தலைமை காவலர் என்.முத்துக்குமார் சொல்ல; டிரைவர் குமாரின் அடாவடியை கண்ட, அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்கள், காரை அங்கிருந்து எடுக்கும்படி சப்தம் போட; வேறு வழியில்லாமல் ஒரு வழியாக அமைச்சரின் காரை டிரைவர் குமார் அங்கிருந்து நகர்த்தினார்.

இதுகுறித்து லாட்ஜில் இருந்த அமைச்சரின் உதவியாளர் கிருபாகரனிடம், அமைச்சரின் கார் டிரைவர் குமார் தான் செய்த தவற்றை மறைத்து; போக்குவரத்து பணியில் இருந்த தலைமை காவலர் முத்துகுமார் குறித்து போட்டு கொடுக்க; லாட்ஜில் இருந்து வெளியே வந்த அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன், நடந்த சம்பவத்தை முறையாக விசாரிக்காமல், போக்குவரத்து பணியில் இருந்த தலைமை காவலர் என்.முத்துக்குமார் (HC-106) என்பவரை அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் ஆபாசமாக திட்டியதோடு; கிருபாகரனின் ஆதரவாளர்கள் இருவர், தலைமை காவலர் முத்துகுமாரின் கைகளை பிடித்துக்கொள்ள; தலைமை காவலர் முத்துகுமாரின் இடது கன்னத்தில், அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன் அறைந்துள்ளார்.

இதனால் நிலை குலைந்த தலைமை காவலர் முத்துகுமார்; அவமானத்தால் கூனி குறுகிப்போனார்; மிகுந்த மனஉளைச்சலுக்கும் உள்ளானார். அமைச்சரின் உதவியாளர் கிருபாகரனின் தாக்குதலில், தலைமை காவலர் முத்துகுமாரின் மூக்கு கண்ணாடி கீழே விழுந்தது.

பாதிக்கப்பட்ட தலைமை காவலர் முத்துகுமார், இது குறித்து திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளார். புற நோயாளியாக மருத்துவ சிகிச்சையும் பெற்றுள்ளார்.

பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதலாகவும்; ஆதரவாகவும் இருக்க வேண்டிய திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய போலிசார், தலைமை காவலர் முத்துகுமாரின் வேலையையும்; அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பையும்; அவர்களின் எதிர்காலத்தையும் நினைவுப்படுத்தி; கிட்டத்தட்ட செல்லமாக அவரை மிரட்டி “மன்னிப்பு” என்ற பெயரில், கட்டப் பஞ்சாயத்து செய்து, அவர் கொடுத்த புகாரை திரும்ப பெற வைத்துள்ளனர்.

இது தன் கடமையை செய்த தலைமை காவலர் முத்துகுமார் கன்னத்தில் மட்டும் விழுந்த அடி அல்ல! முதலமைச்சரும், தமிழ்நாடு உள்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கன்னத்தில் விழுந்த அடியாகவும்; ஒட்டுமொத்த தமிழ்நாடு காவல்துறையினர் மேல் விழுந்த அடியாகவும் இதை கருத வேண்டும்.

இந்த துயரச் சம்பவத்திற்கு முக்கியக் காரணமாக இருந்த அமைச்சரின் கார் டிரைவர் குமார், போக்குவரத்து பணியில் சீருடையில் இருந்த தலைமை காவலர் முத்துகுமாரை கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன் மற்றும் பாதிக்கப்பட்டது சக காவலர் என்று வெளிப்படையாக தெரிந்தும், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளாமல் “மன்னிப்பு” என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து, கொடுத்த புகாரை திரும்ப பெற வைத்த, திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய விசாரணை அதிகாரிகள் மீதும், அதற்கு அழுத்தம் கொடுத்த உயர் அதிகாரிகள் மீதும், இவற்றையெல்லாம் இன்றுவரை வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கும் மாவட்ட அரசு நிர்வாகத்தின் மீதும், சட்டப்படியும்; துறை ரீதியாகவும் உரிய நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு உள்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் போர்கால அடிப்படையில் உத்தரவிட வேண்டும்.

இல்லையென்றால், இது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும்; எதிர்காலத்தில் விரும்பதகாத சட்ட விரோதமான செயல்களுக்கு இது அடித்தளமாக அமைந்து விடும்.

மேலும், அமைச்சரின் கார் என்று தெரிந்தும்; அதிகாரத்திற்கு அஞ்சாமல், தன் கடமையை சிறப்பாக செய்த தலைமை காவலர் முத்துகுமாரின் பொறுப்பானச் சேவையை பாராட்டி, அவருக்கு சன்மானம் வழங்கி, அவரை தமிழ்நாடு முதலமைச்சர் கௌரவிக்க வேண்டும்.

விரைவில் இதற்கு நிச்சயம் விடை கிடைக்கும் என்று நாம் முழுமையாக நம்புகின்றோம்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply