மர்ம நபர்களால் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை!-இரவு நேரத்தில் நடந்த பயங்கரம்.

சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் (HC- 469).

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன் (HC- 469). நேற்று (20.11.2021) இரவு ரோந்து பணிக்கு சென்ற இவர், இன்று (21.11.2021) அதிகாலை கீரனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பள்ளத்துப்பட்டி பாலம் அருகே குறுக்குச் சாலையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இன்று (21.11.2021) அதிகாலை 4 மணியளவில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கீரனூர் காவல் நிலைய போலீசார் வழக்கு (CRIME NO: 405/2021) பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட பூமிநாதனின் சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா, தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் என்பது தற்போது தெரிய வருகிறது.

இன்று (21.11.2021) அதிகாலை 2:20 மணி அளவில் கீரனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளத்தூரில் வசிக்கும், நவல்பட்டு காவல்நிலையத்தில் பூமிநாதனோடு பணியாற்றும் சேகர் என்பவருக்கு, பூமிநாதன் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது ஆடு திருடிய குற்றவாளிகளை பிடித்து வைத்திருக்கிறேன் உடனே துணைக்கு வாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

சம்பவ இடத்தை தேடி கண்டுபிடித்து இன்று (21.11.2021)அதிகாலை 3:48 மணி அளவில் சேகர் வந்து பார்த்தபோது, சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டுப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்திருக்கிறார். அதன் பிறகு தான் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நமதுUTL MEDIA TEAMவிரிவான விசாரணை மேற்கொண்டதில் கீழ்காணும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூலாங்குடி காலனியில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனும், தலைமை காவலர் சித்திரைவேல் என்பவரும் நேற்று (20.11.2021) இரவு வாகன சோதனையில் ஈடுப்பட்டபோது, இருச்சக்கர வாகனத்தில் ஆடுகளை தூக்கி வந்த 25 வயது மதிக்கதக்க இரண்டு வாலிபர்களை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர்.

ஆனால், அந்த வாலிபர்கள் இருச்சக்கர வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாக சென்றுள்ளனர். அவர்களை துரத்தி பிடிப்பதற்காக சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனும், தலைமை காவலர் சித்திரைவேலும் தனி தனியே இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஆனால், ஆடு கொண்டு சென்ற வாலிபர்களின் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க முடியாமல், தலைமை காவலர் சித்திரைவேல் நவல்பட்டு காவல் நிலைய எல்லையிலேயே நின்று விட்டார்.

ஆனால், ஆடு கொண்டு சென்ற வாலிபர்களை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற முயற்சியில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் காவல் நிலைய எல்லையை பொருட்படுத்தாமல், அந்த இரு வாலிபர்களையும் விடாமல் துரத்தி சென்றுள்ளார்.

இந்நிலையில், கீரனூர் காவல் நிலையத்திற்கு வட மேற்கே சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பள்ளத்துப்பட்டி பாலம் அருகே குறுக்குச் சாலையில் சென்ற அந்த வாலிபர்கள், அதற்கு மேல் செல்வதற்கு வழியில்லாமல் திகைத்து நின்ற போது, துணிச்சலுடன் தனி ஒரு நபராக அந்த இரு வாலிபர்களையும் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் பிடித்துள்ளார்.

அதன் பிறகு தான், குளத்தூரில் தங்கியிருக்கும் சேகரை தொடர்பு கொண்டுள்ளார்.

இரவு நேரத்தில் தனி ஒரு நபராக குற்றவாளிகளை பிடிப்பதற்கு எல்லையை பொருட்படுத்தாமல் கடும் முயற்சியில் ஈடுப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது உண்மையிலுமே நெஞ்சம் பதைக்கிறது.

இந்த படுப்பாதக செயலில் ஈடுப்பட்ட கயவர்களை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடிப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சரும், உள்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடனடியாக காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

அப்போது தான் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் ஆன்மா சாந்தி அடையும்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN November 21, 2021 1:27 pm

Leave a Reply