என் ஆசைக்கு இணங்காவிட்டால், உன்னை விபச்சார வழக்கில் கைது செய்வேன்!-வேலியே பயிரை மேய்ந்த கொடுமை!

காவலர் முருகன்.

இரவு நேரத்தில் சினிமா பார்த்துவிட்டு ஆண் நண்பரோடு வந்த பெண்ணை வழிமறித்து; மிரட்டி பணம் பறித்து; செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவற்றை அபகரித்து, அந்த ஆண் நண்பரை அங்கிருந்து அடித்து விரட்டிவிட்டு, என் ஆசைக்கு இணங்காவிட்டால், உன்னை விபச்சார வழக்கில் கைது செய்வேன் என்று அந்த பெண்ணை அச்சுறுத்தி கட்டாய பாலியல் வன்புணர்ச்சி செய்த மதுரை மாநகர் திலகர் திடல் குற்றப்பிரிவு முதல்நிலைக் காவலர் முருகன் என்பவரை, பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின் பேரில், மதுரை மாநகர் திலகர் திடல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு (Crime No: 37/2021) செய்து நேற்று 29.11.2021 சிறையில் அடைத்துள்ளனர்.

இச்சம்பவம் தமிழ்நாடு காவல்துறைக்கு பெருத்த களங்கத்தையும், மக்கள் மனதில் அச்சத்தையும்; நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு பாதுகாவலனாக இருக்க வேண்டிய காவலரே; பணி நேரத்தில் இத்தகைய மாபாதக கொடிய குற்றத்தை செய்திருப்பது உண்மையிலுமே நெஞ்சம் பதைக்கிறது; வேலியே பயிரை மேய்ந்த கதையாகவும் இருக்கிறது.

நடந்த சம்பவத்தையும், நிகழ்வுகளையும் உன்னிப்பாக பார்க்கும்போது காவலர் முருகன் தற்போது செய்திருப்பது இது முதல் முறை குற்றமாக தெரியவில்லை. பல முறை இதுப்போன்ற சம்பவத்தில் ஈடுப்பட்டு இருந்தால் மட்டுமே; இத்தகைய முரட்டு துணிச்சல் வரும். இப்படி இரக்கமில்லா அரக்க செயல்களில் ஈடுப்படவும் முடியும்.

எனவே, கைது செய்யப்பட்ட முருகனை போலிஸ் காவலில் எடுத்து இவரது குற்றப்பின்னனிக் குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும். இவரது பணி பதிவேட்டையும் ஆராய வேண்டும்.

முருகன் சிறையில் இருந்து பிணையில் வெளிவருவதற்கு முன்பாகவே; இந்த வழக்கில குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் வழங்கப்படும் தண்டணை; மற்றவர்களுக்கு மிக பெரிய பாடமாக இருக்க வேண்டும். தில்தான் தமிழ்நாடு அரசின் நேர்மையும்; காவல்துறையின் ஒட்டுமொத்த உண்மையான கண்ணியமும், கௌரவமும் அடங்கியிருக்கிறது.

சிபிசிஐடி-விசாரணை; சிபிஐ-விசாரணை என்று காலம் கடத்தாமல், இவ்வழக்கில் விரைவாக தண்டனை பெற்றுதர தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply