பட்டமளிப்பு விழா மரபுகளை மாற்றக்கூடாது!- முனைவர் பட்டம் நேரில் வழங்கப்படவேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறத் தொடங்கியுள்ள நிலையில், முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு பட்டச்சான்றிதழ் நேரடியாக வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. முனைவர் பட்டம் பெறுவதை தங்களின் வாழ்நாள் சாதனையாக கருதும் ஆராய்ச்சியாளர்களுக்கு தமிழக அரசின் இந்த முடிவு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கொரோனா நோய்ப்பரவல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் கடந்த இரு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டமளிப்பு விழாக்கள் இப்போது மீண்டும் நடைபெறத் தொடங்கி உள்ளன. கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வரும் 6-ஆம் தேதி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திலும், 9-ஆம் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு விழாக்களுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என் இரவி அவர்கள் தலைமையேற்கவுள்ளார்.பட்டமளிப்பு விழாக்களில் தங்கப்பதக்கம் பெறும் மாணவ, மாணவியருக்கு மட்டும் தான் ஆளுனரால் பட்டங்கள் வழங்கப்படும் என்றும், முனைவர் பட்டம் பெற்றவர்கள் பட்டமளிப்பு விழாவிற்கு அனுமதிக்கப் படுவார்கள்; ஆனால், அவர்களுக்கு நேரடியாக பட்டங்கள் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த மரபுகளுக்கு மாறானது ஆகும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழாக்களின் போது முனைவர் பட்டம் பெறும் அனைவருக்கும் விழாத்தலைவர் பட்டங்களை வழங்குவது தான் வழக்கம் ஆகும்.

அந்த மரபை இப்போது மாற்றக்கூடாது.மாணவர்களைப் பொறுத்தவரை முனைவர் பட்டம் என்பது மிகவும் முக்கியமானது. கல்விப் பயணத்தில் அவர்கள் எட்டும் சிகரம் அது தான். அந்த நிலையை அடைய அவர்கள் பள்ளிப்பருவத்தில் தொடங்கி பல்கலைக்கழகம் வரை சுமார் 25 ஆண்டுகள் உழைத்திருக்க வேண்டும். பட்டப்படிப்பின் போதோ, பட்ட மேற்படிப்பின் போதோ பட்டமளிப்பு விழாவில் நேரடியாக பட்டம் பெறும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. அதேபோல், முனைவர் பட்டத்திற்கு பிறகு பெறுவதற்கு வேறு எந்தப் பட்டமும் இல்லை.

ஆனால், முனைவர் பட்டம் அனைவருக்கும் நேரடியாக வழங்கப்படும் என்பதாலும், அது தான் அவர்கள் வாழ்வில் கல்விக்காக பெறும் மிக உயர்ந்த அங்கீகாரம் என்பதாலும் அது அனைவருக்கும் முக்கியமானது.அதுமட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், குடிமைப்பணி அதிகாரிகள், பேராசிரியர்கள் என பலரும் தங்களின் பணியின் போதே, முக்கியத் தலைப்புகளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெறுகின்றனர். அவர்கள் உட்பட முனைவர் பட்டம் பெற்ற அனைவருக்கும் அதற்கான சான்றிதழைப் பெறுவதற்கான தருணம் தான் அவர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது ஆகும். அந்த வாய்ப்பை எந்தக் காரணம் கொண்டு முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு பல்கலைக்கழகங்கள் மறுக்கக்கூடாது.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 500 முதல் 600 பேர் முனைவர் பட்டத்திற்கு தேர்ச்சி பெறுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் பட்டச் சான்றிதழ் வழங்க சில மணி நேரம் ஆகலாம். கொரோனா உள்ளிட்ட வேறு காரணங்களால் அவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் சான்றிதழ் வழங்க முடியாது என்றால் பட்டமளிப்பு விழாவை இரு கட்டங்களாக நடத்தலாமே தவிர, முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்க மறுக்கக்கூடாது.

இந்நிலை மாற வேண்டும்.பட்டமளிப்பு விழா குறித்த சர்ச்சைகள் ஒருபுறமிருக்க, பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் படிப்படியாக அரசின் கைகளில் இருந்து ஆளுனர் மாளிகைக்கு மாறிக் கொண்டிருப்பதை காண முடிகிறது. பல்கலைக் கழக துணைவேந்தர்களை தேர்வு செய்வதில் தொடங்கி கொள்கை முடிவுகள் எடுப்பது வரை ஆளுனர் மாளிகை தான் ஆதிக்கம் செலுத்துவதாக செய்திகள் வெளியாகின்றன. பல பல்கலைக்கழகங்களில் புதிய கல்வித் திட்டத்தின்படியான புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இது சரியல்ல.

சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து அரசு பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களிலும் முனைவர் பட்டதாரிகளுக்கு நேரடியாக சான்றிதழ் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். அதேபோல், தமிழக அரசு பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அரசு கொள்கைகளை பின்பற்றி செயல்படுவதையும் உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

–சி.கார்த்திகேயன்

Leave a Reply