புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் விழா 2022-க்கான இலச்சினையை வெளியிட்டார் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்!

புதுச்சேரியில் வரும் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய இளைஞர் விழா-2022-க்கான இலச்சினை புதுச்சேரியில் இன்று வெளியிடப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் முன்னிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத் துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இலச்சினையை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், இந்த ஆண்டுக்கான தேசிய இளைஞர் விழாவை நடத்துவதற்கு புதுச்சேரியை பிரதமரே தேர்வு செய்திருப்பது நமக்கு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணம் என்று குறிப்பிட்டார். இதன் துவக்க விழாவில் (ஜனவரி 12, 2022) பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்க இருப்பது மேலும் சிறப்பு என்றும் அமைச்சர் கூறினார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை அமிர்தப் பெருவிழாவாகக் கொண்டாடி வரும் நிலையில், இந்த தேசிய இளைஞர் தின விழா இங்கு நடைபெறவுள்ளதாக அவர் கூறினார்.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இளைஞர் தின விழாவின் வெள்ளி விழா, மகாகவி பாரதியார் மறைந்த நூற்றாண்டு ஸ்ரீ அரவிந்தரின் 150 ஆவது பிறந்த நாள் ஆகியவை இந்த தேசிய விழாவில் சங்கமிப்பதைக் சுட்டிக்காட்டிய அமைச்சர், வெளியுலகிற்கு தெரியாத விடுதலைப் போராட்ட வீரர்களை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் விழாவாகவும் இது அமையும் என்றார். நாடுமுழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான திறமை மிக்க இளைஞர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளதாகவும், அவர்களுக்கு இந்த விழா வாழ்க்கையில் மறக்க முடியாதத் தருணமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இங்கு நடைபெறவுள்ள கலாச்சார விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறிய அமைச்சர், இளைஞர்கள் திறமையானவர்களாகவும், வலுவானவர்களாகவும் இருந்தால்தான் நாடு முன்னேற முடியும், அவர்களது ஆற்றலை பயன்படுத்தும் நேரம் வந்து விட்டதாகத் தெரிவித்தார். இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகளை பார்வையிடுவதற்காக தாம் இங்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த விழாவை சிறப்பாக நடத்த அனைத்து விதமான ஏற்பாடுகளையும், புதுச்சேரி அரசும், துணை நிலை ஆளுநரும் மேற்கொண்டுள்ளதாகவும், மத்திய அரசை பொறுத்தவரை எந்த உதவித் தேவைப்பட்டாலும் அதனை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை உலகமே உற்று நோக்குவதாகவும், தமது திறமையை, தகுதியை நிரூபிப்பதில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது என்றும் கூறிய அமைச்சர், உள்ளூர் மக்கள் இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் வெற்றி அடைய முடியாது என்பதால், அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி முதலமைச்சர் திரு என் ரங்கசாமி, கல்வி அமைச்சர் திரு நமச்சிவாயம், சட்டப்பேரவைத் தலைவர் திரு ஏம்பலம் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், விழா நடைபெறவுள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் உயரதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply