விடுதலைக்கு முன்பும் அதே நிலை…!- விடுதலையடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதே நிலை தான்!- நீட் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.

தமிழ்நாட்டு கிராமத்து மக்கள் பத்து பக்கங்களில் சொல்ல வேண்டிய செய்திகளை 10 வார்த்தைகளில் சொல்லி விடுவார்கள். அதிலும் நாட்டார் வழக்குப் பாடல்கள் உண்மையை முகத்தில் அடித்தார்போல் சொல்லக்கூடியவை. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தையும், ஆக்கிரமிப்பையும் அவை பாடியுள்ளன.

இந்தியாவில் வணிகம் செய்வதற்காக கிழக்கிந்திய கம்பெனியின் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள், ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆக்கிரமித்துக் கொண்டனர். அதன்பின்னர் இந்தியாவில் ஓர் அணுவை அசைப்பதாக இருந்தாலும் லண்டன் சீமையிலிருந்து தான் உத்தரவு வர வேண்டும்.

இது என்ன கொடுமை…. இந்தியாவில் இந்தியர்கள் அவர்களின் விருப்பப்படி செயல்பட உரிமை இல்லையா?

இந்தக் கேள்வியைத் தான் கீழ்க்கண்ட நாட்டார் வழக்குப் பாடலாக பாடி வைத்தனர் நமது தமிழர்கள்.

‘‘ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டான் வெள்ளிரிக்கா
காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி
காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன்’’

இந்தியர்கள் வெள்ளரிக்காய் விளைவித்தாலும் அதற்கான விலையை லண்டன் சீமையிலிருந்து கொண்டு ஆங்கிலேயர்கள் தான் தீர்மானித்தார்கள்; அந்த அளவுக்கு அவர்களின் ஆதிக்கம் இருந்தது என்பது தான் இந்த பாடலின் பொருள்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இவ்வளவு ஆதிக்கமா இருந்தது?…. நல்ல வேளை நாமெல்லாம் விடுதலை பெற்ற இந்தியாவில் பிறந்து விட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டீர்கள் என்றால் சற்று பொறுங்கள்…

இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகும் போதிலும் கூட இன்னும் நாம் விளைவிக்கும் வெள்ளரிக்காய்க்கு நாம் விலை வைக்க முடியவில்லை. அப்போது லண்டன் செய்த வேலையை இப்போது தில்லி செய்கிறது.

நான் வெள்ளரிக்காய் என்று சொல்வது நீட் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தான்.

தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவை அனைத்தும் நமது வரிப்பணத்தில் கட்டப்பட்டவை. அவற்றில் அனைத்து இடங்களிலும் நம்மவர்களை சேர்க்க நமக்கு உரிமை உண்டு. ஆனால், 35 ஆண்டுகளுக்கு முன் எல்லா மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15% இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு கொடுங்கள் என்று கேட்டு மத்திய அரசு பிடுங்கிக் கொண்டது.

அதன்பின் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50% இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு பறித்துக் கொண்டது. ஆதிக்கக் கரங்களின் நீட்சி அத்துடன் நின்று விடவில்லை. உயர் சிறப்பு படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த நமக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கூறி எல்லா இடங்களையும் மத்திய அரசு கொள்ளையடித்துக் கொண்டது.

அத்துடன் விட்டதா?மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை நீங்கள் நடத்தும் 12&ஆம் வகுப்பு தேர்வுகளின் அடிப்படையில் சேர்க்கக்கூடாது; நாங்கள் நடத்தும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு தான் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டது மத்திய அரசு. அதனால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத மாணவர்கள் 70 பேருக்கும் மேல் இதுவரை தற்கொலை செய்து கொண்டனர். ஆனாலும், மத்திய அரசு இதுவரை மனமிறங்கவில்லை.

இப்போது புரிகிறதா… நாம் சாகுபடி செய்த வெள்ளரிக்காய்க்கு வெள்ளைக்காரன் விலை நிர்ணயித்ததைப் போல, இப்போது நாம் உருவாக்கிய மருத்துவப் படிப்புக்கு மத்திய அரசு தான் தகுதியை நிர்ணயிக்கிறது என்பது?

விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் நாம் பெற்ற அதிகாரங்கள் என்ன?அதைப்பற்றியெல்லாம் நமக்கு என்ன கவலை…. நாம் நமது பாணியில் ‘‘ மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’’ என்ற 50 ஆண்டுகால முழக்கத்தை மேடைகளில் எழுப்பிக் கொண்டே தூங்கி விடுவோம்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

–சி.கார்த்திகேயன்

Leave a Reply