சிறுமி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் இதுவரை தமிழ்நாடு மற்றும் இந்தியா உள்பட; உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஊடகங்கள் அவரரவர் உட்கார்ந்த இடத்தில் இருந்தே யூகத்தின் அடிப்படையில் யானையை தடவிப் பார்த்து ——–குறிச் சொன்ன கதையாக கதை, திரைகதை, வசனம், பாடல்களை தொடர்ந்து செய்திகளாக வெளியிட்டு வருகின்றனர்.
அடிப்படையில் சிறுமி லாவண்யாவை மனித உயிராக மதிக்காமல்; மதம் மற்றும் அரசியல் பிரச்சனையாக இது அவதாரம் எடுத்துள்ளது. இதில் மனித நேயம் முற்றிலும் மறைந்துப் போனது.
இந்நிலையில், “சிக்கலை ஏற்படுத்தியுள்ள சிறுமி லாவண்யா தற்கொலை விவகாரம்!-முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நேர்மையை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது!”-என்ற தலைப்பில் January 25, 2022, இரவு 8:15 மணிக்கு, நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில், நமது “UTL MEDIA” இயக்குநரும், “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியருமான டாக்டர் துரைபெஞ்சமின் அவர்கள் விரிவான செய்தி ஒன்றை நேர்மையான முறையில்; நடு நிலையோடு வெளியிட்டு இருந்தார். அச்செய்தி தற்போது நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
அச்செய்தியில், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், திருவையாறு காவல் உட்கோட்டம், திருக்காட்டுப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மைக்கேல்பட்டி என்ற கிராமத்தில் உள்ள செயின்ட் மைக்கேல் மாணவியர் விடுதியில் தங்கி, அங்கே உள்ள தூய இருதய பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாவட்டம், வடுக பாளையத்தைச் சேர்ந்த தாயை இழந்த 17 வயது மாணவி ஒருவர்; விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகவும், அவரை மருத்துவ தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்காமல், பிரச்சனை பெரிதாகி விடும் என்பதால், பயந்து கொண்டு அவரை அவரது தந்தை வசம் ஒப்படைத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததாகவும், இந்நிலையில் அந்த மாணவிக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்து உயர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயர சம்பவம் மிகுந்த வேதனையை அளித்துள்ளது.
இது சம்பந்தமாக திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு (40/2022) செய்யப்பட்டு மைக்கேல்பட்டி மாணவியர் விடுதி காப்பாளர் சகாயமேரி (வயது 62) என்பவரை இந்திய தண்டனைச் சட்டம் 305 (பதினெட்டு வயதுக்கு உட்பட்டவரின் தற்கொலைக்கு உடந்தை), 511 (மரணத் தண்டனை; ஆயுள் தண்டனை குற்ற முயற்சி) 75, 82(1) ஆகிய பிரிவுகளின் கீழ் திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் 18.01.2022 அன்று கைது செய்து நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், அச்சிறுமி உயிரிழப்பதற்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட காணொளி, தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாணவியை அந்த கிறிஸ்துவ பள்ளி நிர்வாகம் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தான் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். எனவே இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று, பாரதிய ஜனதா கட்சியும், அதனைச் சார்ந்த இந்து அமைப்புகளும் மாநிலம் முழுவதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இப்பிரச்சனையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும், தமிழ்நாடு ஆளுநர் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவனத்திற்கும் பாரதிய ஜனதா கட்சியினர் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஏழு நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு உரிய விளக்கமளிக்குமாறு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விஷம் அருந்திய அந்த மாணவியை காலதாமதம் இல்லாமல் உடனடியாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து உள்நோயாளியாக தொடர் சிகிச்சை செய்து இருந்தால் நிச்சயம் அந்த மாணவி உயிர் பிழைத்து இருப்பார். இதை செய்யத் தவறியது விடுதி நிர்வாகத்தின் மிகப் பெரிய தவறு.
பெற்ற தாயை இழந்து, தந்தையின் அரவணைப்பை துறந்து தங்களையே கதி என்று முழுமையாக நம்பிக்கொண்டிருந்த அந்த மாணவியை கண்ணும் கருத்துமாக இருந்து கண்காணித்து காப்பாற்ற வேண்டிய விடுதி நிர்வாகம். ஏதோ ஒரு வகையில் அச்சிறுமியின் தற்கொலைக்கு காரணமாக இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை.
ஆனால், மதமாற்ற வற்புறுத்தலால் மட்டும்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முழுமையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு மத்திய புலனாய்வு துறை விசாரணைக்கு உத்தரவிடுவதில் எந்த தவறும் இல்லை.
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தயக்கம் காட்டத் தேவையில்லை. தங்களது நேர்மையை நிரூபிக்க வேண்டிய தருணமாக கருதி சிபிஐ விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும்.
அனைத்து மதத்திலும், அனைத்து இனத்திலும், எல்லா அமைப்பிலும், எல்லா அரசியல் கட்சிகளிலும் நல்லவர்களும், இருக்கிறார்கள்; கெட்டவர்களும் இருக்கிறார்கள். இதை யாரும் மறுக்க முடியாது.
எனவே உயிர் என்பது எல்லோருக்கும் பொதுவானது. இதில் ஜாதி, மத, மொழி பேதம் பார்க்க வேண்டிய அவசியம் இலலை.
இவ்வாறு அச்செய்தியில், நமது “UTL MEDIA” இயக்குநரும், “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியருமான டாக்டர் துரைபெஞ்சமின் அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்.
அச்செய்தியில் நமது “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர் டாக்டர் துரைபெஞ்சமின் அவர்கள் குறிப்பிட்டு இருந்ததைப் போல; இவ்வழக்கை உடனே சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தால்; இந்த வழக்கு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூனி குறுகி நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது.
எனவே ஆட்சி நிர்வாகத்தில் குறிப்பாக சட்டம், காவல்துறை மற்றும் உள்துறை விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால், இதுபோன்ற தர்ம சங்கடங்களையும்; அவமானங்களையும் தமிழக அரசு தொடர்ந்து சந்திக்க நேரிடும்.
சிறுமி லாவண்யா வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதி மன்ற நீதிபதி ஜீ.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் அளித்த உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
SodaPDF-watermarked-LAVAYA-CASE-MADURAI-HIGH-COURT-ORDER
-கே.பி.சுகுமார்., B.E.,
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
இதுதொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்.
https://www.ullatchithagaval.com/2022/01/25/67209/