பிப்ரவரி 15-16 தேதிகளில் இந்தியாவில் அருங்காட்சியகங்களை மறுவடிவமைத்தல் குறித்த உலக உச்சிமாநாட்டுக்கு முதன் முறையாக மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ், இந்தியாவின் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளைப் பறைசாற்றும் இந்த உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
முன்னணி பிரமுகர்கள், நிபுணர்கள், அருங்காட்சியக கள வல்லுனர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து உலகில் அருங்காட்சியகங்களை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் நடைமுறைகள், உத்திகள் குறித்து இந்த உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படும். ப்ளூம்பர்க் ஒத்துழைப்புடன் இது நடத்தப்படுகிறது.
மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி இதனைத் தொடங்கிவைக்கிறார். இந்த உச்சிமாநாடு குறித்து கூறிய அமைச்சர், மனித நாகரிகத்தின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை இந்தியா கொண்டுள்ளது. விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை நாம் கொண்டாடி வரும் நிலையில், நமது கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் கவனத்தை செலுத்துவது பெருமைக்குரியதாகும். இந்தியாவின் 1000-க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் சின்னங்களாக மட்டும் இல்லாமல் வருங்கால சந்ததியினருக்கு கற்பிக்கும் இடங்களாகவும் திகழ்கின்றன என்று தெரிவித்தார்.
–எஸ்.சதிஸ் சர்மா