புதிய தொழில் தொடங்குவதற்கு உலகின் தலைசிறந்த இடமாக இந்தியா உருவெடுத்து வருவதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இதுவரை கண்டறியப்படாத ஏராளமான வாய்ப்புகளுடன் தொழில் தொடங்குவதை எளிமையாக்கியது, பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்ட முறைப்படுத்தும் சூழல் போன்றவற்றின் காரணமாக, புதிய தொழில் தொடங்குவதற்கு உலகின் தலைசிறந்த இடமாக இந்தியா உருவெடுத்து வருவதாக பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

புதுதில்லியில்  இன்று ஸ்டார்ட் அப் தொடர்பான மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய அவர், புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கான அபரிமிதமான சூழல்  நிலவுவது, 2025 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை இந்தியா அடைவதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றார். 

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பல்வேறு திட்டங்கள் மற்றும் அவற்றின் மீது சிறப்பு கவனம் செலுத்தி உரிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதால் இந்தியாவில் 2021 –ல் மட்டும் 10 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.  இந்தியாவில் தற்போது 50,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்  நிறுவனங்கள் செயல்படுவதாகவும் இவை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்கி வருவதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

பால்வளம், தொலை மருத்துவம் மற்றும் ஆழ்கடல் வளங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும்  திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை உருவாக்க அரசு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply