நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2% ஆக உயரும்! – மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்.

சென்னையில் நடைபெற்ற தூர்தர்ஷன் கலந்தாய்வு அரங்கத்தில் காணொலி வாயிலாக பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், அரசின் கொள்கை ரீதியான தலையீடுகள் மற்றும் புதுமையான அணுகுமுறைகள் காரணமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2% அளவுக்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

பிரதமரின் கட்டமைப்பு வளர்ச்சிக்கான தேசிய பெருந்திட்டம் (கதி சக்தி) மூலம் நெடுஞ்சாலை, ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்றவற்றை உருவாக்க அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

இந்த திட்டம் மூலம் 25,000 கிமீ தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இயற்கை விவசாயத்திற்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதையும் திரு அனுராக் தாக்கூர் சுட்டிக்காட்டினார். விவசாயிகளின் மேம்பாட்டில் மாநில அரசுகளும், சம பங்குதாரர்களாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பெருந்தொற்று காரணமாக கல்வியில் ஏற்பட்ட பாதிப்பை போக்க, இ-வித்யா போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.

இந்தியாவை தற்சார்பு அடைந்த நாடாக மாற்ற குறிப்பாக, பாதுகாப்புத் துறையில் மட்டும் 68% அளவுக்கு உள்நாட்டு தொழில் நிறுவனங்களிடம் இருந்து, கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருப்பதையும் அவர் எடுத்துரைத்தார். அனைவரும் இணைவோம்- அனைவரும் உயர்வோம், அனைவரும் முயற்சிப்போம்- அனைவரின் நம்பிக்கையை பெறுவோம் என்பதே அரசின் வழிகாட்டும் கொள்கையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு, பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் 80 லட்சம் வீடுகள், டிஜிட்டல் சுகாதார இயக்கம் போன்றவை வளமான இந்தியாவை உருவாக்க வழிவகை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply