பள்ளி, கல்லூரிகள், அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் அந்தந்த மாநில தாய் மொழி வாழ்த்தும்; அந்தவகையில் தமிழ்நாட்டில் தமிழ்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி நிறைவில் தேசிய கீதமும் இசைக்கும் / பாடும் வழக்கம், பழக்கம் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.
அதை பாடலாகவோ, இசையாகவோ ஒலிப்பரப்பாமல், நிகழ்ச்சி மற்றும் விழாக்களில் வாய்மொழியாகவே பாடவேண்டும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் ஆணை பிறப்பித்துள்ளது. இது உண்மையிலுமே பாராட்ட வேண்டிய நல்ல விசயம் தான்.
ஆனால் “சர்க்கரை” என்று காகிதத்தில் எழுதி நக்கினால் இனிக்குமா என்ன?!-சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும், அதை சிறப்பாக நடைமுறைப்படுத்த முனைப்புக்காட்ட வேண்டும்.
அந்தந்த மாநில தாய் மொழி வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடும்போதும், இசைக்கும் போதும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், சமீப காலங்களில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவதும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசியகீதம் பாடுவதும் வெறும் சடங்காகவே நடைமுறையில் இருந்து வருகிறது. பல அரசு நிகழ்ச்சிகளில் இவை முறையாக கடைபிடிப்பது இல்லை என்பது கண்கூடாக பார்க்க முடிகிறது.
அங்கன்வாடி ஆசிரியர்கள் முதல் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் வரை விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத் தவிர, மீதம் உள்ள நபர்களுக்கு தமிழ்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை மனப்பாடமாக பிழையின்றி பாட கூட தெரியாது என்பது, உண்மையிலுமே வேதனைக்குரிய செய்தியாக இருக்கிறது.
ஆசிரியர்கள் லட்சணமே இப்படி என்றால், மாணவர்களின் நிலையை நாம் சொல்லத்தான் வேண்டுமா?! வாய்க்குள் நுழையாத; வார்த்தையால் வெளிப்படுத்த முடியாத; வாழ்க்கைக்கு பயன்படாத; அர்த்தமற்ற, பொருளற்ற, ஆபாசமான, விரசமான சினிமா பாடல்களை ஒரு எழுத்து கூட விடாமல் மனப்பாடம் செய்யும் மாணவர்கள், தமிழ்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் ஏதோ தீண்டத்தகாத பாடலாகவே இன்றுவரை கருதி வருகிறார்கள். இது உண்மையிலுமே வெட்கப்பட வேண்டிய விசயம்.
மாணவர்கள்தான் இந்த நிலை என்றால், மக்களால் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நிலை அய்யோ பரிதாபம்!-அதை இங்கு வார்த்தைகளாலோ, எழுத்துக்களாலோ இங்கு விவரிக்க முடியாது.
இன்னும் வெளிப்படையாக சவால் விட்டு கூற வேண்டுமானால் மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றக்கூடிய கடை நிலை ஊழியர்கள் முதல் தலைமைப் பொறுப்பு வகிக்கும் உயர் அதிகாரிகள் வரை, அந்தந்த மாநில தாய்மொழி வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் பார்க்காமல் எழுதவும், பார்க்காமல் பாடவும் செய்வதற்கு ஒரு தேர்வு வைத்தால், இதில் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள்?!-சந்தேகமே.
கடந்த காலங்களில் திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்பு மாநில தாய்மொழி வாழ்த்தும், படம் முடிந்தவுடன் தேசிய கீதமும் ஒளிபரப்பும் வழக்கம் நடைமுறையில் இருந்து வந்தது என்பதை இன்றைய தலைமுறையினருக்கு நாம் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
எனவே, அந்தந்த மாநில தாய்மொழி வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் பிழையின்றி பாடுவதற்கு அவசியம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் கண்காணிப்பு குழுக்களை அவசியம் அமைக்க வேண்டும்.
அரசு பணிக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் அந்தந்த மாநில தாய்மொழி வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் மனப்பாடமாக பிழையின்றி பாடவும், எழுதவும் தெரிந்த நபர்களுக்கு மட்டும் தான் அரசு மற்றும் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்பதை சட்டமாகவே இயற்ற வேண்டும்.
மேலும், தொலைக்காட்சி போன்ற செய்தி மற்றும் பொழுதுப்போக்கு காட்சி ஊடகங்களில் காலை 6:00 மணிக்கு அந்தந்த மாநில தாய்மொழி வாழ்த்தும், மாலை 6 மணிக்கு தேசிய கீதமும் கட்டாயம் இசைக்க வேண்டும் என்பதை மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், காட்சி ஊடக நிறுவனங்களுக்கு கட்டாய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதை பின்பற்றாத காட்சி ஊடகங்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும். அவசியம் ஏற்பட்டால் அதற்கு ஏற்றவாறு சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும். இத்தகைய நடைமுறை இந்திய நீதித்துறைக்கும் பொருந்தும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு அந்தந்த மாநில தாய்மொழி வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை பிழையில்லாமல் பாடும் மற்றும் எழுதும் நபர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் ஒவ்வொரு குடிமகனும் தேசிய கீதத்தை பிழையின்றி பாட தெரிந்திருக்கும் அதேசமயம், அந்தந்த மாநில மக்கள் அந்தந்த மாநில தாய்மொழி வாழ்த்தையும் பிழையின்றி மனப்பாடமாக பாடுவதற்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மேலும், தனியார் நிறுவனங்களில் வேலைவய்ப்பு வழங்கும் போது அந்தந்த மாநில தாய்மொழி வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் அங்கு பணியில் சேரும் நபர்கள் பிழையில்லாமல் மனப்பாடமாக பாடத் தெரிந்திருக்க வேண்டும் என்பதையும் கட்டாயமாக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் ஐந்தாண்டு திட்டம்/ பத்தாண்டு திட்டம் என்று காலம் கடத்தாமல், அடுத்த நூறு நாட்களுக்குள் இலக்கு நிர்ணயத்து இதை நாடு முழுவதும் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் வரிப்பணத்தில் வயிறு வளர்க்கும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இவர்கள் அனைவரும் இவ்விசயத்தில் மனசாட்சியோடு முன் மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.
தேசப்பற்றும், தாய் மொழிப்பற்றும் இல்லாத நபர்கள் இந்த மண்ணையும், மக்களையும் எப்படி நேசிப்பார்கள்?!-சற்று யோசிக்க வேண்டும்.
தாய்மொழி வாழ்த்து, தேசிய கீதம் பிழையின்றி பாட தெரியவில்லை என்றால், அதை தேச அவமானமாகவும், தேசிய குற்றமாகவும் கருத வேண்டும்.
-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
தமிழ்த் தெய்வ வணக்கம்.
தமிழ் தாய் வாழ்த்து.
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
விளக்கம்.
நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கிற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த தமிழர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே! இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!
தேசிய கீதம்
ஜன கண மன அதிநாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல வங்கா
விந்திய ஹிமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா
தவசுப நாமே ஜா கே
தவசுப ஆசிஷ மாகே
காயே தவஜய காதா
ஜன கண மங்கல தாயக ஜயகே
பாரத பாக்ய விதாதா
ஜயஹே ஜயஹே ஜயஹே
ஜய ஜய ஜய ஜயஹே
-மகாக்கவி இரவீந்திரநாத் தாகூர்.
தமிழாக்கம்.
இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற
நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.
நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்
மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.
வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.
நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில்
எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின்
இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்
வணங்கப்படுகிறது.
அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன.
இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு
வெற்றி! வெற்றி! வெற்றி!
-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com