காசநோய் குறித்து பள்ளி, கல்லூரி அளவில் விழிப்புணர்வு!

காசநோய் குறித்து பள்ளி, கல்லூரி அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது எனவும், 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் காசநோய்த் தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் தமிழக காசநோய்த் தடுப்புத் திட்டக் கூடுதல் இயக்குனர் மரு. ஆஷா ஃப்ரட்ரிக் தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகமும் தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் பணிகள் இயக்குநரகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த காசநோய் ஒழிப்பு குறித்த ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது மருத்துவச் சுகாதார வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் பயிலரங்கில் தலைமை வகித்துப் பேசிய மரு. ஆஷா ஃப்ரட்ரிக், காசநோய் உடலின் எந்த பாகத்தை வேண்டுமானாலும் தாக்கக் கூடும் என்பதால், அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனத் தெரிவித்தார். காசநோயைக் கண்டறிவதற்காக சோதனை மையங்கள் அதிகப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், கொரோனா போன்று காசநோய்க்கும் முக்கியத்துவம் அளித்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே நமது இலக்கு எனவும், அதற்கேற்ப, பள்ளி, கல்லூரி அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய, உலக சுகாதார நிறுவனத்தின் காசநோய்த் தடுப்பு பிரிவு ஆலோசகர் மரு. பிரபு ராவணன் பேசுகையில், இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 37 பேர் என்ற வீதத்தில் காசநோயால் இறக்கின்றனர் எனத் தெரிவித்தார். மேலும், கிராம அளவில் காசநோயைக் கண்டறிவதற்காக நடமாடும் சோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன எனவும், இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கபட உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். காசநோய் சிகிச்சைப் பெறுபவர்களுக்கு நேரடி வங்கிப் பரிவர்த்தனை மூலம் அரசு நிதியுதவி அளித்து வருவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து காசநோயிலிருந்து மீண்டு, தற்போது காசநோய் விழிப்புணர்வு தன்னார்வலராக உள்ள வேலூரைச் சேர்ந்த திருமதி. பூவிதா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சென்னை, பத்திரிகை தகவல் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply