புதுதில்லியில் சாகித்ய அகாடமியின் இலக்கிய திருவிழாவை கலாச்சாரத் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் இன்று தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் பெரும்பாலானவர்களை உள்ளடக்கிய இலக்கிய திருவிழா புதுதில்லியில் இன்று தொடங்கியது. இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், இலக்கியத் திருவிழா 2022 கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையும், சாகித்ய அகாடமியின் கண்காட்சியையும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தொடங்கிவைத்தார். கடந்த ஆண்டுகளில் அகாடமியின் சாதனைகளையும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் வெளிப்படுத்துவதாக இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு அர்ஜூன் ராம் மெக்வால், கால மாற்றத்தில் புதிய தொழில் நுட்பங்கள் நமது கையில் இருக்கும் நிலையில், சாகித்ய அகாடமியின் காலத்தின் தேவைக்கேற்ப மாற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நமது இலக்கியத்தில் ஏற்படும் மாற்றத்தை நாம் ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அகாடமியால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 24 இந்திய மொழிகளைச் சேர்ந்த 26 இளம் எழுத்தாளர்கள், “இளைய இந்தியாவின் எழுச்சி” என்ற நிகழ்வில் பங்கேற்றனர். ரவீந்திரபவன் புல்வெளியில் நடைபெற்ற நிகழ்ச்சியை பிரபல அசாம் எழுத்தாளர் யெஷே டோர்ஜி தோங்சி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்திய மொழிகளில் வெளியீடுகள் குறித்த குழு விவாதத்தில் பிரபல பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் பங்கேற்றனர்.

புதுதில்லி காப்பர்மிகஸ் மார்கில் உள்ள கமானி அரங்கில் 2022 மார்ச் 11 அன்று பிற்பகல் 5 மணிக்கு கவுரவமிக்க சாகித்ய அகாடமி விருது பெற்ற 24 விருதாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெறும். சாகித்ய அகாடமியின் தலைவர் டாக்டர் சந்திரசேகர் கம்பர் விருதுகளை வழங்குவார். நிகழ்ச்சியில் பிரபல மராத்தி கவிஞரும் விமர்சகருமான டாக்டர் பாலசந்திர நெமாடே தலைமை விருந்தினராக பங்கேற்பார்.

இந்திய சுதந்திர இயக்கத்தில் இலக்கியத்தின் தாக்கம் குறித்த 3 நாள் தேசிய கருத்தரங்கு சாகித்ய அகாடமி அரங்கில் 2022 மார்ச் 13 அன்று தொடங்கும்.

திவாஹர்

Leave a Reply