மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்!

கிண்டியிலுள்ள மத்திய அரசின், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மேம்பாட்டு சேவை மையத்தில், இன்று 12/03/2022 “மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்” (கை, கால் மற்றும் செவித்திறன் குறைபாடு உடையோருக்கு) நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு துவங்கிய இம்முகாம் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இவ்வேலை வாய்ப்பு முகாமில் 400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறானாளிகள் பங்கேற்றனர். 18-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறானாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பும் அடுத்தகட்ட பரிசீலனையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வினை, சுங்கத்துறை துணை ஆணையர் பூ.கொ.சரவணன் IRS, அவர்கள் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். இம்மையத்தின் துணை இயக்குனர் (பொறுப்பு) சங்கீதா பற்குணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சார்தக் கல்வி அறக்கட்டளை நிகழ்ச்சி மேலாளர் மாலதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் உதவிப் பேராசிரியர் ஜெர்ரி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

துவக்க விழாவில் பேசிய சுங்கத்துறை துணை ஆணையர் பூ.கொ.சரவணன் IRS, “மாற்றுத்திறானாளிகளுக்கு இந்த சமூகம் துணை நிற்க வேண்டும். பெற்றோர்களும், நண்பர்களும் அவர்களுக்கு உறுதுணையாக நின்று அவர்களின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க வேண்டும்.” என வலியுறுத்தினார்.

ஆர்வத்துடன் வந்து பங்கேற்ற அனைத்து மாற்றுதிறனாளிகளுக்கும் நன்றி தெரிவித்து பேசிய, துணை இயக்குனர்(பொறுப்பு) சங்கீதா பற்குணன், மத்திய அரசின், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மேம்பாட்டு சேவை மையம் மூலமாக, அனைத்துவித மாற்றுத்திறனாளிகளுக்கான இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாமை மாவட்டம் தோறும் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

திவாஹர்

Leave a Reply