காதலை கண்டித்த பெண்ணின் தந்தையை மிளகாய் பொடி தூவி, இரும்பு கம்பியால் தாக்கி, பெட்ரோல் ஊற்றி கொடூரமாக கொலை செய்த கல்லூரி மாணவன்!

கொலை செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கூம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நத்தப்பட்டி, தென்னம்பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 48), இவர் வேடசந்தூர் -வடமதுரை சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே “கதிர் போட்டோ ஸ்டூடியோ” நடத்தி வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும் மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

பாலசுப்பிரமணியன் மகள் 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியும், தனியார் கல்லூரியில் பி. காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் குளிப்பட்டியை சேர்ந்த தங்கவேலுவின் மகன் விமல்ராஜ் (வயது 19) ஆகிய இருவரும் ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.

கொலை செய்த கல்லூரி மாணவன் விமல்ராஜ்

இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் தந்தை பாலசுப்பிரமணியனுக்கு தெரிய வந்ததை அடுத்து, கடந்த வாரம் குளிப்பட்டியில் உள்ள விமல்ராஜ் வீட்டிற்குச் சென்று இனிமேல் எனது மகளை தொந்தரவு செய்ய கூடாது என்று கல்லூரி மாணவன் விமல்ராஜை கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், வீடு திரும்பிய பாலசுப்பிரமணியன், இனிமேல் எக்காரணத்தை முன்னிட்டும் நீ விமல்ராஜூடன் பேசக்கூடாது என்று மகளின் செல்போனை பிடுங்கி உடைத்து கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதனால் காதலியிடம் பேச முடியாமல் ஆத்திரமடைந்த விமல்ராஜ், தனது நண்பரான சரவணன் (வயது21) என்பவரிடம் இதை கூறியுள்ளார். இந்நிலையில், சரவணன் தனது நெருங்கிய நண்பரான இடையகோட்டையை சேர்ந்த அஜித்திடம் தொடர்பு கொண்டு இந்த விஷயத்தை கூறியுள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் தந்தை பாலசுப்பிரமணியனை கொலை செய்ய அஜித் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கொலை செய்யும் இடத்திற்கு செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்றும், கைரேகை பதிவுகளை அழிப்பதற்காக கொலை செய்துவிட்டு பெட்ரோல் பயன்படுத்தினால் கைரேகை தெரியாது என்றும் திட்டங்களை வகுத்துக் கொடுத்துவிட்டு, தன்னால் நேரில் வர முடியாது என்று சொல்லி விட்டு, அஜித் சம்பவத்தன்று சினிமாவிற்கு சென்றுவிட்டான்.

இத்திட்டத்தை செயல்படுத்த விமல்ராஜூம், சரவணனும் ஒன்று சேர்ந்து நத்தபட்டி பாலசுப்பிரமணியன் தோட்டத்து வீட்டின் அருகே 10/03/2022 இரவு 10.30 மணிக்கே சென்று நோட்டமிட ஆரம்பித்தனர்.

இந்நிலையில், 10/03/2022 அன்று இரவு 7 மணி அளவில் தனக்கு சொந்தமான TN 57 AV 5050 ஹோண்டா சைன் என்ற இருசக்கர வாகனத்தில் வேடசந்தூரில் உள்ள ‘லயன்ஸ் கிளப்’ கூட்டத்திற்கு செல்வதாக தன் மனைவி புவனேஸ்வரியிடம் கூறிவிட்டு சென்ற பாலசுப்பிரமணியன், அன்று இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

பாலசுப்பிரமணியன் கதையை முடிப்பதற்காக அங்கு செடிக்குள் மறைந்திருந்த கல்லூரி மாணவன் விமல்ராஜும், அவரது நண்பர் சரவணனும் அன்று இரவு 12 மணிக்கு பாலசுப்பிரமணியன் இருசக்கர வாகனத்தில் வருவதை கண்டு, கையில் வைத்திருந்த மிளகாய்பொடியை எடுத்து பாலசுப்பிரமணியின் முகத்தில் தூவி விட்டனர். இதனால் கண் எரிச்சல் தாங்க முடியாமல் பாலசுப்பிரமணியன் தவித்துள்ளார். அச்சமயம் பாலசுப்பிரமணியன் பின் மண்டையில் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அதன் பின்னர் பாலசுப்பிரமணியன் நெற்றி, முகம், தாடை போன்ற பகுதிகளில் கொடூரமாக குத்தி உள்ளனர். இதில் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதன் பின்னர் தாங்கள் இருவரும் கொண்டு வந்திருந்த பெட்ரோலையும், பாலசுப்பிரமணியன் இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலையும் திறந்து பாலசுப்பிரமணியன் உடலை தீ வைத்து எரித்து விட்டு, தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து விமல்ராஜூம், சரவணனும் தப்பி சென்று விட்டனர்.

இந்நிலையில், 11/03/2022 அன்று காலை 6 மணி வரை தனது கணவர் பாலசுப்பிரமணியன் வீடு திரும்பாததால், தங்களிடம் செல்போன் இல்லாததால், பக்கத்து தோட்டத்துக்காரர் பழனிவேல் என்பவரின் செல்போனிலிருந்து பாலசுப்பிரமணியன் செல்போனுக்கு, தனது மகளை பேச சொல்லியுள்ளார் புவனேஸ்வரி. மூன்று முறை தொடர்புகொண்டும் பாலசுப்பிரமணியன் செல்போனை எடுக்கவில்லை.

இந்நிலையில், டொக்கு வீரன்பட்டி செல்வதாக கூறி சென்ற பக்கத்து தோட்டத்துக்காரர் பழனிவேல், சிறிது நேரத்திலே திரும்பி வந்து முனியப்பன் என்பவர் தோட்டம் அருகே பாலசுப்பிரமணியன் எரிந்த நிலையில் இருசக்கர வாகனதோடு கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு சென்ற பாலசுப்பிரமணியன் மனைவி புவனேஸ்வரி, இதுகுறித்து கூம்பூர் காவல் நிலைய போலீசாருக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு (Crime No: 16/2022) செய்தனர்.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் பேரில், வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில்தான், 11-ஆம் வகுப்பு படிக்கும் பாலசுப்பிரமணியன் மகள் 16 வயது சிறுமிக்கும், கல்லூரி மாணவர் விமல்ராஜூக்கும் இருந்த காதல் விவகாரம் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் வேடசந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார், குற்றவாளிகளான விமல்ராஜ், சரவணன், கொலைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்த அஜித் ஆகிய 3 பேரையும் நேற்று (12/03/2022) கைது செய்தனர். காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேற்காணும் உண்மையை வாக்கு மூலமாக அளித்தனர். இதனையடுத்து வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி குற்றவாளிகள் 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

மகளின் காதலை கண்டித்த தந்தையை மிளகாய் பொடி தூவி, இரும்பு கம்பியால் தாக்கி, பெட்ரோல் ஊற்றி கொடூரமாக கொலை செய்த சம்பவம், நாடு முழுவதும் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply