நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன!-கடலூர் மாவட்ட ஆட்சியர் க.பாலசுப்பிரமணியம்.

ஜனநாயக நாட்டில் மக்களாட்சி சிறப்பாக நடைபெற நான்காவது தூணாகிய ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானதாகும். நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக ஊடகங்கள் பணியாற்றுகின்றன. அரசின் திட்டங்கள், கொள்கைகள், முயற்சிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதோடு மக்களின் பல்வேறு பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கும் கொண்டு வருகின்றன. தகவல் தெரிவிப்பதோடு கற்பித்தல் பணியிலும் ஊடகங்கள் சிறப்பகப் பணியாற்றுகின்றன. பேரிடர் காலங்களில் ஊடகங்களின் பணி மகத்தானது ஆகும். எங்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது, எங்கு மக்கள் திண்டாடுகின்றனர் என ஊடகங்கள் எடுத்துச் சொல்லும்போது மாவட்ட நிர்வாகம் அந்தந்தப் பகுதிகளுக்குச் சென்று உதவி செய்ய முடிகின்றது. கொரோனா தொற்றுக் காலத்தில் பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களின் பங்கு ஈடு இணையற்றது என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

சென்னையில் இயங்கிவரும் மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் சார்பில் கடலூரில் இன்று (29-03-2022) நடைபெற்ற ஊரக ஊடகவியலாளருக்கான புத்தாக்கப் பயிலரங்கைத் துவக்கி வைத்துப் பேசியபோது ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

சுற்றுலா வளர்ச்சியிலும் ஊடகங்கள் பணி சிறப்பாக உள்ளது. ஒரு மாவட்டத்தில் உள்ள வெளித்தெரியாத சுற்றுலாத் தலங்கள் குறித்து மக்கள் ஊடகங்கள் வாயிலாகத் தெரிந்துகொண்டு பயணம் மேற்கொள்கிறனர். மற்ற துறை அலுவலர்கள் போலவே செய்தியாளர்களுக்கும் அவ்வப்போது புத்தாக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் இணைந்து செயலாற்றும்போது மக்களுக்கான சேவை சிறப்பானதாக இருக்கும். அந்த வகையில் பத்திரிகைத் தகவல் அலுவலகம் நடத்தும் இந்தப் பயிலரங்கம் மிகப் பயனுள்ளது என்று ஆட்சியர் பாலசுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார்.

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்னிந்திய மண்டல தலைமை இயக்குனர் திரு.எஸ்.வெங்கடேஸ்வர் தலைமையுரை ஆற்றினார். கடந்த பத்தாண்டுகளாக பத்திரிகைத் தகவல் அலுவலகம் பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற ஊரக ஊடகவியாலளர் பயிலரங்குகளை நடத்தி வருகின்றது. தொழில்முறை நிபுணத்துவம் உள்ளவர்களாக செய்தியாளர்கள் திகழ வேண்டும் என்பதுதான் இந்தப் பயிலரங்கம் நடத்துவதன் நோக்கமாகும். எந்தத் தகவல் சரி எது தவறு, எது உண்மை எது பொய் என்று பிரித்தரியும் ஆற்றலை செய்தியாளர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். சரியான தகவல்களை சரியான நேரத்தில் வழங்கும் பணியை செய்தியாளர்கள் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும் என்று வெங்கடேஸ்வர் கேட்டுக் கொண்டார்.

சென்னையில் உள்ள பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவல்கம் ஆகியவற்றின் கூடுதல் தலைமை இயக்குனர் திரு.எம்.அண்ணாதுரை வரவேற்புரை ஆற்றி பயிலரங்கின் நோக்கம் குறித்தும் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்காக மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தயாரிக்கப்பட்ட குறுநூலை மாவட்ட ஆட்சியர் க.பாலசுப்பிரமனியம் வெளியிட்டார். துவக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து உரையமர்வுகள் நடைபெற்றன. சென்னை சமூக நலம் மற்றும் மகளிருக்கு அதிகாரம் அளித்தல் துறை கூடுதல் இயக்குனர் திருமிகு.ஜி.ஜெயலட்சுமி, கடலூர் சுகாதரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஆர்.மீரா, சென்னை தொழில்திறன் மற்றும் தொழில்முனைவு மண்டல இயக்குனரகத்தின் துணை இயக்குனர் திருமிகு டி.சுபாஸ்ரீ, கடலூர் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் திரு.அருண், கடலூர் மீன்வளத் துறை துணை இயக்குனர் திரு.என்.எம்.வேல்முருகன் ஆகியோர் தத்தம் துறை திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து உரையாற்றினர்.

நிறைவில் புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குனர் திரு.தி.சிவக்குமார் நன்றி கூறினார். இந்தப் பயிலரங்கில் சுமார் 75 செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

திவாஹர்

Leave a Reply