நாட்டின் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளிப்பதாகவும், ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஐதராபாதில் நடைபெற்ற சேட்டக் ஹெலிகாப்டரின் 60-ஆம் ஆண்டு சேவையையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இன்று உரையாற்றினார்.
நாட்டின் பாதுகாப்பிற்காக ராணுவம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசமே பங்களிப்பதாக கூறினார். சேட்டக் ஹெலிகாப்டரை வடிவமைத்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தைப் போன்ற மற்ற நிறுவனங்களின் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆகியோரும் ராணுவ வீரர்களைப் போன்று சமமான முக்கிய பங்களிப்பை செய்வதாகத் தெரிவித்தார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்களும், பணியாளர்களும் இத்திட்டத்திற்கான பாகங்களை விநியோகிப்பதாக கூறினார். கடந்த 60 வருடங்களில் சேட்டக் ஹெலிகாப்டர்கள் நாட்டிற்காக தொடர்ந்து சேவை புரிந்துள்ளதாக அவர் தெரிவித்தார். போரில் பங்கேற்று நாட்டிற்கு சேவை செய்வதற்காக சுமார் 700 சேட்டக் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், கூட்டு முயற்சிக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் கூறினார். எதிரிகளின் இலக்குகளை துல்லியமாகக் கண்காணித்து படை வீரர்கள் வெற்றிகரமாக தரையிறங்குவதிலும் சேட்டக் சிறந்து விளங்கியது என்றும் கூறினார். அவரச காலத்தில் மீட்புப் பணியின் மூலம் மதிப்புமிக்க உயிர்களை பாதுகாத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இயற்கைச் சீற்றங்களின் போது மனித நேய உதவி, பேரிடர் நிவாரணம் ஆகியப் பணிகளில் சேட்டக் ஹெலிகாப்டர் முன்னோடியாக திகழ்ந்தது என்றும் அவர் தெரிவித்தார். ஹெலிகாப்டர் தொழில்நுட்பத்தை வடிவமைப்பது நமது பாதுகாப்புத்துறைக்கு வலு சேர்க்கும் என்றும் சர்வதேச சந்தையில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் வகையில் வடிவமைக்க வேண்டும் என்றும் திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
ஹக்கிம்பேட்டில் உள்ள விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சவுத்ரி, முப்படைகளில் ஹெலிகாப்டர் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற மற்றும் பணியாற்றி வரும் மூத்த அதிகாரிகள் பாதுகாப்புத்துறை அமைச்சக, இந்திய கடலோரக் காவல் படை, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவன மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
–எம்.பிரபாகரன்