சொத்து வரி உயர்வை தமிழ்நாடு அரசு உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

தமிழ்நாடு அரசு வரலாறு காணாத அளவிற்கு சொத்துவரியை தற்போது உயர்த்தியுளளது.

மத்திய அரசின் நிர்ப்பந்தத்தின் காரணமாக தான் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர் கே.என். நேரு பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கும், அமைதிக்கும், நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு அரசின் உத்தரவு மற்றும் கொள்கை முடிவு இருக்குமானால், ஜனநாயகத்தில் அது மக்கள் விரோத நடவடிக்கையாகதான் கருதப்படும்.

கொரோனா பேரிடரில் இருந்து மக்கள் இன்னும் மீள முடியாமல் தவித்து வரும் இந்த நெருக்கடியான நேரத்தில், மத்திய அரசின் நிர்பந்தத்துக்காக, தமிழ்நாட்டில் சொத்து வரியை உயர்த்தி உள்ளோம் என்று சொல்வதை மக்கள் யாரும் நம்ப தயாராக இல்லை.

உப்புப் பொறாத விஷயத்திற்கெல்லாம் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்து சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பிடிவாதமாக தொடர்ந்து போராடி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. இந்த சொத்து வரி விஷயத்தில் மட்டும் மத்திய அரசின் உத்தரவை வேதவாக்காக கருதி உடனே நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?!

இந்த சொத்து வரி உயர்வானது சொத்தின் உரிமையாளர்களுக்கு மட்டும்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. இவற்றின் தாக்கம் அனைத்து மட்டத்திலும் எதிரொலிக்கும். ஆம், வீடு மற்றும் வணிக நிறுவனங்களின் வாடகை உயர்வுக்கு இது வழிவகுக்கும். இதன் மூலம் விலைவாசி உயரும். இதனால் ஏழை, நடுத்தர மக்களுக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியானது ஒரு மரத்தில் நன்றாக கனிந்து இருக்கும் பழத்தை அந்த மரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு பறிப்பது போல இருக்க வேண்டும்.

ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் சொத்து வரியானது “கரும்பு இனிக்கிறது என்பதற்காக வேரோடு பிடிங்கி கதையாக” இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் இந்த பொறுப்பற்ற முடிவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு பெரும் களங்கததை உண்டாக்கும்.

எங்களுக்கு கிடைத்த தகவலின்படி திமுக தலைமையில் உள்ள கூட்டணிக் கட்சிகளும் இந்த சொத்து வரி உயர்வை எதிர்த்து போராட்டத்தில் குதிக்கும் தர்மசங்கடமான சூழல் தற்போது உருவாகியுள்ளது.

எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரியை உடனடியாக தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கும், ஆட்சிக்கும் நன்மையை விளைவிக்கும்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply