விளையாட்டு, மாநில அளவிலான துறை என்பதால், அடிமட்ட அளவில் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் பொறுப்பு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் உள்ளது. இந்த முயற்சிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கிறது. இருப்பினும், கேலோ இந்தியா திட்டத்தின் திறமையைத் தேடி மேம்படுத்துதலின் கீழ் அடிமட்ட அளவில் திறன் தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது.
விளையாட்டுத் திறனை கண்டறிவதற்காக, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடகிழக்கு என நாடு ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 8 முதல் 14 வயதுக்குட்பட்ட திறமைமிகு சிறார்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய விளையாட்டு ஆணையத்தின் பிரதிநிதிகளைக் கொண்ட தேர்வுக்குழு விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் பணியை மேற்கொள்கிறது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் விளையாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர்கள் உள்ளனர்.
விளையாட்டு வீரர்களுக்கு உலக அளவிலான தரமான பயிற்சி வழங்குவதற்காக திறமை வாய்ந்த, பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களை பயிற்சியாளர்களாக நியமிக்கிறது. விளையாட்டுச் சூழலை அடிமட்ட அளவில் கொண்டு சென்று சிறந்த பயிற்சி வழங்கி தடகளம் மற்றும் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே அரசின் நோக்கமாக உள்ளது. கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இரண்டு விளையாட்டு உள்கட்டமைப்புத் திட்டங்களை குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் அகமதாபாத் நகரங்களில் செயல்படுத்த அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மக்களவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
–எஸ்.சதிஸ் சர்மா