இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பாலமாக கல்வி செயல்படும் என்று தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வியும், வர்த்தகமும் செயல்பாட்டை நோக்கி நமக்கு அதிகாரமளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிட்னியில் நியூ சவுத் வேல்ஸ் மாணவர்களிடையே இன்று கலந்துரையாடியகோயல், கொவிட்டுக்கு பிந்தைய உலகில் நேரடியான மற்றும் இணைய வழியான திட்டங்களுக்குரிய சாத்தியங்களை நாம் கண்டறிய வேண்டும் என்றார்.
இந்தியா – ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இயற்கையான கூட்டாளி என்பதை காட்டுகிறது என கூறிய திரு கோயல், இதன்மூலம் எஃகு உற்பத்தித் திறனும், எரிசக்தித் திறனும் மூன்று மடங்காகும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
பின்னர், ஆஸ்திரேலியாவின் வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்த வர்த்தக தலைவர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர், இந்தியா – ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் அடுத்த 5-6 ஆண்டுகளில் நமது இருதரப்பு வர்த்தகத்தை இருமடங்காக்க உதவும் என்றார். 2030 வாக்கில் இருதரப்பு வர்த்தக இலக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை அவர் வெளியிட்டார்.
இந்த ஒப்பந்தத்தின் தேவையை உணர்த்தும் விதமாக, இந்தியாவில் முதலீடு அலுவலகம் ஒன்றை இந்தியா திறக்கவிருப்பதாகவும், ஒருசில மாதங்களில் ஆஸ்திரேலியாவில் வர்த்தக மேம்பாட்டு அலுவலகம் திறக்கப்படவிருப்பதாகவும் கோயல் கூறினார்.
–எம்.பிரபாகரன்