இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார உபகரணங்களுக்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் முக்கிய தடைகள் நீக்கப்பட்டுள்ளன. மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான, மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் மின் சாதனங்களுக்கு சான்றளிக்கும் அமைப்புகளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த அங்கீகாரத்தால் மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தின் சோதனைச் சான்றிதழைப் பெற்ற உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை நாட்டிற்கு வெளியே உள்ள வேறு எந்த அமைப்பினாலும் மறுபரிசோதனை அல்லது அங்கீகாரம் ஏதுமின்றி ஏற்றுமதி செய்ய முடியும். இது இந்தியாவில் ஏற்கனவே வலுவான உள்நாட்டு மேம்பாடு மற்றும் மின் உற்பத்திப் பொருட்களின் உற்பத்திக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும். இதன் மூலம் ‘தற்சார்பு இந்தியா இயக்கம்’ வலுப்படுத்தப்படும்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சார பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய சோதனை அறிக்கையை சில நாடுகள் ஏற்பதில்லை என்ற ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலும், இந்தத் தொழிலின் போட்டித்தன்மையை மேம்படுத்தும் வகையிலும், இதற்கான அங்கீகாரத்தை உடனடியாக பெறுமாறு மின்துறை அமைச்சகம் மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தை அறிவுறுத்தியது. மின் மாற்றிகள் மற்றும் மின் உலைகள் , கேபிள்கள் மற்றும் அதன் பாகங்கள், மின்தேக்கிகள், சுவிட்ச்கியர் மற்றும் கண்ட்ரோல் கியர், டிரான்ஸ்மிஷன் லைன் பாகங்கள் மற்றும் எனர்ஜி மீட்டர்களை உள்ளடக்கிய சோதனை அறிக்கைகளுக்கான சான்றிதழை மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் பெற்றது. இது இந்தியாவில் அதிக அளவில் மின் சாதனங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அங்கீகாரம், உலகளவில் சந்தை மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு, திறமையான, நிலையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் சான்றிதழ் நடைமுறைகளுக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள வகை செய்கிறது. ஐஎஸ்ஓ/ ஐஇசி 17065 இன் நோக்கம் இணக்க மதிப்பீடு அல்லது தயாரிப்புகள், செயல்முறைகள் மற்றும்/அல்லது சேவைகளின் சான்றிதழ் அளிப்பதாகும். மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தால் வழங்கப்படும் சோதனை அறிக்கை, அந்நிறுவனத்தின் சான்றளிக்கும் பிரிவால் அங்கீகரிக்கப்பட்டு சோதனைச் சான்றிதழை வழங்கும்.
–திவாஹர்