மக்களுக்கு உணவை உறுதி செய்தல், குறைந்த செலவில் சுகாதார வசதி, எரிசக்தி எளிதாக கிடைத்தல், போன்ற பொதுவான சவால்களுக்கு புதிய வகையிலான அறிவியல் தீர்வு காண ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் கைகோர்க்க வேண்டும் என்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணைஅமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் கூட்டத்தில் இணையம் வழியாக உரையாற்றிய அவர், பருவநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கத்தில் ஏற்படும் இழப்பு போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் சவால்களை கூட்டாக எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார். உஸ்பெகிஸ்தான் தலைமையில் 2022 செப்டம்பரில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாமர்க்கண்ட் நகரில் நடைபெற உள்ள உச்சிமாநாடு வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்த அமைச்சர், இதற்கு இந்தியாவின் முழுமையான ஆதரவை உறுதி செய்தார்.
ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுப்பிடிப்புக்கு தொடர்ச்சியான ஊக்கம் அளித்தன் விளைவாக என்எஸ்எஃப் தரவுகள் அடிப்படையில் அறிவியல் சார்ந்த வெளியீடுகளில் இந்தியா 3-வது இடத்தைப் பெற்றுள்ளது என்பதை டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார். உலகளாவிய புதிய கண்டுப்பிடிப்பு குறியீட்டின்படி, உலகளாவிய ஐம்பது புதிய கண்டுபிடிப்பு முதன்மை பொருளாதாரங்களில் இந்தியா 46-வது இடத்தைப் பெற்றுள்ளது என்றும் ஆராய்ச்சிக்கான டாக்டர் பட்டங்கள் பெறுவது, உயர்கல்வி முறையின் அளவு ஆகியவற்றில் 3-வது இடத்தைப் பெற்றுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான அரசின் செலவு கடந்த 7 ஆண்டுகளில் இருமடங்காகி உள்ளது என்று கூறிய டாக்டர் சிங், தற்போதைய பட்ஜெட்டில் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு ரூ.14,800 கோடியும், தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கத்திற்கு 5 ஆண்டுகளுக்கு ரூ.50,000 கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
அதிக மக்களைக் கொண்ட சந்தையாகவும், அறிவு சார்ந்த பொருளாதாரத்தால் இயக்கப்படுவதாகவும் இருப்பதால் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் வருங்காலத்தில் உலகளாவிய முக்கியத்துவத்தைப் பெறும் என்று அறிவியல் தொழில்நுட்பத்துறைக்கான இந்திய அமைச்சர் தெரிவித்தார். உள்நாட்டுப் பொருளாதாரங்களுக்கு பொருத்தமான அறிவியல் தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்குவதில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்றும் அவர் கூறினார்.
எம்.பிரபாகரன்