பாலியல் குற்ற வழக்கில் ஜாமீன் வழங்கிய நீதிபதியிடமே சரணடைந்த நர்சிங் கல்லூரி தாளாளர்!

ஜோதிமுருகன்.

பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

திண்டுக்கல் அடுத்துள்ள முத்தனம்பட்டியில் சுரபி நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் தாளாளராக ஜோதி முருகன் இருந்து வருகிறார்.

இவர் நர்சிங் கல்லூரியில் படித்துவந்த மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி கல்லூரி மாணவர்கள் திண்டுக்கல் – பழனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து 3 மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் ஜோதி முருகன் மீது 2 போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 3 வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், இதற்கு உடந்தையாக இருந்த கல்லூரியின் விடுதி காப்பாளர் அர்ச்சனாவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில், தலைமறைவான ஜோதிமுருகன் திருவண்ணாமலை போளூர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆனார். இதனையடுத்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென ஜோதிமுருகன் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி விசாரணை செய்த நீதிபதி புருஷோத்தமன், ஜோதிமுருகன் 2 போக்சோ வழக்குகளில் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதனிடையே தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கல்லூரி தாளாளர் ஜோதி முருகனுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தது.

அதேபோல அகில இந்திய மாதர் சங்கத்தினர் தங்களை இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக சேர்க்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்தனர்.

Hon’ble Mr. Justice K. Murali Shankar.

downloaded-53_watermarked

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி முரளி சங்கர், ஜோதி முருகனுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் மனுவை ரத்து செய்ததோடு, மூன்று நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் அல்லது காவல்துறையினர் அவரை கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இதை தொடர்ந்து ஜோதிமுருகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, சரண்டர் ஆகும் காலக்கெடுவை உயர்த்தி ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் கொடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று ஜோதிமுருகன் திண்டுக்கல் ஒருங்கிணைந்த மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி புருஷோத்தமன் முன்பு சரணடைந்தார். ஆம், எந்த நீதிபதி இவருக்கு ஜாமீன் வழங்கினாரோ; அதே நீதிபதியிடம் ஜோதிமுருகன் இன்று சரணடைந்தார்.

இதனை அடுத்து வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை திண்டுக்கல் கிளைச் சிறையில் அடைக்க நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டார்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply