மேடையில் துணைத்தலைவர் அமர்வதற்கு இருக்கை வழங்காத நகராட்சி நிர்வாகம்!-ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கத்தை ஏற்படுத்தி வரும் லால்குடி நகராட்சி தலைவர்!

லால்குடி நகராட்சி தலைவர் துரை மாணிக்கம்.

லால்குடி நகராட்சி அலுவலகம்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த உள்ளாட்சித் தேர்தல் பதவி காலம் வரை பேரூராட்சியாக இருந்து வந்த லால்குடி. அதன் பிறகு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு; தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 24 உறுப்பினர்கள் (Councillors) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் திமுக சார்பில் 17 பேரும், அதிமுக சார்பில் 4 பேரும், சுயேட்சையாக 2 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒருவரும் உறுப்பினர்களாக இத்தேர்தலில் வெற்றி பெற்றனர்.

இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் லால்குடி நகராட்சியில் திமுக சார்பில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வெற்றி பெறும் பட்சத்தில், நகராட்சி தலைவர் பதவி 5 வார்டில் போட்டியிட்ட சுகுணா ராஜ்மோகனுக்கு வழங்க லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன் மனப்பூர்வமாக விரும்பினார். அதற்கு இரு அமைச்சர்களும் தடையாக இருக்க மாட்டார்கள் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக 21-வது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற பி.துரைமணிக்கம் என்பவரை லால்குடி நகராட்சித் தலைவராகவும், சுகுணாா ராஜ்மோகனை லால்குடி நகராட்சி துணைத் தலைவராகவும் திமுக தலைமை அறிவித்தது.

திமுக தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு லால்குடி நகராட்சி துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட சுகுணா ராஜ் மோகனுக்கு, லால்குடி நகராட்சியில் துணைத்தலைவர் அமர்வதற்கு இருக்கை வழங்காமல் தொடர்ந்து அவரை அவமானப்படுத்தி வருகின்றனர்.

லால்குடி நகராட்சி துணைத் தலைவர் சுகுணா ராஜ் மோகன்.

nomination-6_watermarked

லால்குடி நகராட்சி தலைவர் துரை மாணிக்கம்.

nomination-7_watermarked

இந்நிலையில், லால்குடி நகராட்சியின் இரண்டாவது கூட்டம் நேற்று (08/04/2022) நடைபெற்றது. அப்போது தலைவர் துரை மாணிக்கத்திற்கு மேடையில் இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், துணைத்தலைவர் சுகுணாவுக்கு இருக்கை வசதி அளிக்கப்படாமல், கவுன்சிலர்களோடு,கவுன்சிலராக அமர்ந்திருக்கும் வகையில் கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை பலமுறை குறிப்பிட்டு சுட்டிக்காட்டியும், மேடையில் துணை தலைவருக்கான இருக்கை அமைத்து தரவில்லை. லால்குடி நகராட்சி ஆணையரிடம் முறையிட்டும் இதற்கு தீர்வு கிடைக்காத நிலையில், வேறுவழியில்லாமல் இதனை கண்டித்து லால்குடி நகராட்சி துணைத்தலைவர் சுகுணா, நகராட்சி கூட்டத்தில் இருந்து நேற்று (08/04/2022) வெளிநடப்பு செய்தார்.

ஆளுங்கட்சியை சேர்ந்த நகராட்சி துணைத் தலைவருக்கே அவருக்கான இருக்கையைை வழங்காமல் இழுத்தடிக்கும் இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லால்குடி நகராட்சி தலைவர் துரைமாணிக்கம் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், நகராட்சி துணைத்தலைவர் சுகுணா ராஜ்மோகன் தேவேந்திர குல வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர் அதனால் தான் இதுபோன்ற பிரச்சினை அங்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் தேவேந்திரகுல வேளாளர் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

அரசியல் விவகாரம் தற்போது அங்கு ஜாதிப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இச்சம்பவம் குறித்து லால்குடி நகராட்சி ஆணையர் வி குமார் அவர்களை தொடர்பு கொண்டு நாம் விவரம் கேட்டோம்.

லால்குடி நகராட்சி ஆணையர் V. குமார்.

கூட்ட மேடையில் துணைத் தலைவர் அமர்வதற்கு நாற்காலி போடவில்லை என்பது உண்மைதான். மேடையில் போதிய இடவசதி இல்லாததால் நாற்காலி போடவில்லை. மற்றபடி இதற்கு வேறு காரணங்கள் இல்லை என்று முடித்துக் கொண்டார்.

பாவம் அவர் என்ன செய்ய முடியும்!?-நகராட்சி தலைவர் சொல்வதை மறுத்து பேச முடியுமா என்ன?!

இச்சம்பவம் குறித்து நேற்றைய கூட்டத்தில் கலந்துக்கொண்ட லால்குடி நகராட்சி உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம்.

துணைத்தலைவர் அமர்வதற்கு மேடையில் போதிய இடம் இல்லை என்று நகராட்சி ஆணையர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்கு மனமில்லை என்று தான் எங்களுக்கு தோன்றுகிறது. பதவி ஏற்பு நடந்தபோது இதே மேடையில் தான் ஏராளமானோர் அமர்ந்திருந்தனர். அப்போது மட்டும் எங்கிருந்து இடம் வந்தது?!

நடுவில் நகராட்சி தலைவர், வலது மற்றும் இடது பக்கத்தில் நகராட்சி துணைத் தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் அமர்ந்து கூட்டத்தை நடத்துவதுதான் உண்மையான மரபு. இதை முறையாக செய்து இருந்தால் இந்த பிரச்சனைக்கே அங்கு வேலையில்லை.

நகராட்சி துணைத் தலைவருக்கே அமர்வதற்கு இடமளிக்க முடியாதவர்கள்; மக்களுக்கு என்னத்தை செய்யப்போகிறார்கள்?!

சமத்துவம், சகோரதத்துவம், சமூகநீதி இவைதான் எங்களின் உயிர் மூச்சு; இவற்றை நாடெங்கும் நடைமுறைபடுத்துவதுதான் எங்களின் திராவிட மாடல் ஆட்சி’ என்று நாள்தோறும் முழங்கி வரும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும் தமிழ்நாட்டில், அவரது கட்சிக்கார பெண்ணுக்கே இதுபோன்ற அவலம் நடந்துள்ளது என்பதை நினைக்கும்போது உண்மையிலுமே நெஞ்சம் பதைக்கிறது..

ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ள லால்குடி நகராட்சி தலைவர் துரை மாணிக்கத்தின் மீதும். அதற்கு உடந்தையாக இருந்துவரும் நகராட்சி ஆணையர் மீதும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பாரா?!

பொறுத்திருந்துப் பார்ப்போம்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply