தலை சிறந்த சமூக சீர்திருத்தவாதியும், தத்துவ மேதை மற்றும் எழுத்தாளருமான மகாத்மா ஜோதிபா பூலே-வின் பிறந்தநாளையொட்டி அவருக்குப் பிரதமர் நரேந்திர மோதி மரியாதை செலுத்தியுள்ளார். சமூக நீதியின் முன்னோடியாகவும், எண்ணற்ற மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்ந்த மகாத்மா பூலே சமூக சமத்துவம், மகளிர் அதிகாரமளித்தல் மற்றும் கல்வியை ஊக்குவிக்க அயராது பாடுபட்டவர் என்றும் திரு.மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
சிறந்த சிந்தனையாளரான ஜோதிபா பூலே-வின் சிந்தனைகள் குறித்து தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ள பிரதமர், பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்க பள்ளிக்கூடங்களை தொடங்கிய மகாத்மா பூலே, பெண் சிசுக் கொலைக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்ததுடன், தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு காணவும் பல்வேறு இயக்கங்களை மேற்கொண்டவர் என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில்;
“சமூக நீதியின் முன்னோடியாக திகழ்ந்ததற்காக பெரிதும் போற்றப்படும் மகாத்மா பூலே எண்ணற்ற மக்களின் நம்பிக்கை ஆதாரமாக திகழந்தார். பன்முக ஆளுமை கொண்டவரான அவர், சமூக சமத்துவம், மகளிர் அதிகாரமளித்தல் மற்றும் கல்வியை ஊக்குவிக்க அயராது பாடுபட்டவர். அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.”
“இன்று மகாத்மா பூலேவின் பிறந்தநாள், இன்னும் சில தினங்களில், அதாவது 14-ந் தேதி அம்பேத்கரின் பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறோம். கடந்த மாத #மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர்களுக்கு மரியாதை செலுத்தினேன். மகாத்மா பூலே மற்றும் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் தலை சிறந்த பங்களிப்புகளுக்காக இந்தியா அவர்களுக்கு என்றும் நன்றிக்கடன்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
–எம்.பிரபாகரன்