இந்திய கடற்படையின் பி8-ஐ கடல்சார் ரோந்து மற்றும் உளவு விமானம் ஆஸ்திரேலியாவின் டார்வினுக்கு சென்றடைந்துள்ளது.
அங்கு தங்கியிருக்கும் காலத்தில், இந்தியக் கடற்படையின் கடல்சார் ரோந்துப் படையான அல்பாட்ராஸ் குழு, ராயல் ஆஸ்திரேலிய விமானப்படையின் 92-வது பிரிவைச் சேர்ந்த வீரர்களுடன் கூட்டு செயல்பாட்டில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.
கடல்சார் கள விழிப்புணர்வை அதிகரிப்பு, நீர்மூழ்கி மற்றும் மேற்பரப்பு கண்காணிப்பு ஆகியவற்றில் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை இரு நாடுகளைச் சேர்ந்த பி8 விமானங்கள் மேற்கொள்ளும்.
கடலில் இருதரப்பு மற்றும் பலதரப்பு பயிற்சிகள் மூலம் இரு கடல் நாடுகளுக்கிடையேயான தொடர்பு சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. மலபார் மற்றும் ஆஸ்இன்டெக்ஸ் தொடர் பயிற்சிகளின் போது பி8 விமானங்கள் கூட்டாகச் செயல்பட்டன. மேலும், இயக்க நடைமுறைகள் மற்றும் தகவல் பகிர்வு பற்றிய பொதுவான புரிதலை இரு தரப்பும் கொண்டுள்ளன.
இந்தோனேசியாவிற்கும் வடக்கு ஆஸ்திரேலியாவிற்கும் இடையே உள்ள கடல்பரப்பு இரு நாடுகளுக்கும் பரஸ்பர ஆர்வமுள்ள பகுதியாகும். இப்பிராந்தியத்தில் சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை இரு நாடுகளும் வலுப்படுத்துகின்றன.
–எம்.பிரபாகரன்