40-வது ஹுனார் ஹாத் கண்காட்சியை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மும்பையில் நாளை திறந்து வைக்கிறார்.

சுதேசி பொருட்களை பாதுகாத்து, ஊக்குவிப்பதற்கான நம்பத்தகுந்த தளமாக திகழும் ஹுனார் ஹாத் கண்காட்சியின் நாற்பதாவது பதிப்பு மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா வளாகத்தில் அமைந்துள்ள எம்எம்ஆர்டிஏ மைதானத்தில் ஏப்ரல் 16 முதல் 27 வரை நடைபெற உள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் இந்த கண்காட்சியை நாளை காலை முறைப்படி தொடங்கி வைக்கிறார். 

கண்காட்சியின் சிறப்பம்சங்கள் குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான கைவினைக் கலைஞர்கள் இதில் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை காட்சிப்படுத்துவார்கள் என்று கூறினார். 

மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, நாகாலாந்து, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், பீகார், ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட், கோவா, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், குஜராத், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கைவினை கலைஞர்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ளனர். 

கைவினைப்பொருட்கள், கைவினைத்திறன் ஆகியவற்றுடன் தொடர்புடைய இளைய தலைமுறை குடும்பங்கள் முக்கியமாக சந்தைகள் இல்லாத காரணத்தால் தங்களது மூதாதையர் பாரம்பரியத்திலிருந்து விலகிச் செல்லத் தொடங்கியுள்ளதாக அமைச்சர் கூறினார். 

அவர் மேலும் கூறியதாவது: “உள்நாட்டு  கைவினைஞர்களின் பாரம்பரியத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக பல்வேறு பயனுள்ள நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோதி எடுத்துள்ளார். ‘ஹுனார் ஹாத்’ போன்ற திட்டங்கள் கைவினைஞர்களுக்கு மகத்தான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களின் மூதாதையர் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல உதவுகின்றன”. 

எம்.பிரபாகரன்

Leave a Reply