நாடு சுதந்திரமடைந்து 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் நடைபெற்று வரும் விடுதலைப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, நிதிசார் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் சமூகம் நிதிசார் நடவடிக்கைகளை இணைந்து உருவாக்கவும், அவற்றிற்கான புதுமையான தீர்வுகளை வழங்கவும், அஞ்சல் துறையின் (DoP) கீழ் செயல்பட்டுவரும் 100% அரசு நிறுவனமான இந்திய அஞ்சலகக் கட்டண வங்கி (IPPB), ஃபின்க்ளூவேஷன் (Fincluvation) உடன் இணைந்து செயல்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
இதன் தொடக்க விழாவில் பேசிய மத்திய இரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், யுபிஐ, ஆதார் போன்ற நிதிசார் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா விரைவான முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவித்தார். நிதிசார் தொழில்நுட்பத்தில் “ஃபின்க்ளூவேஷன்” என்பது முக்கிய முயற்சியாகும். நிதி தொடர்பான உள்ளடக்கத்தை இலக்காகக் கொண்டு, அர்த்தமுள்ள வகையில் நிதி தயாரிப்புகளை உருவாக்குவதற்கு ஸ்டார்ட்-அப் சமூகத்தை அணிதிரட்ட ஒரு சக்திவாய்ந்த தளத்தை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாகும். இந்திய அஞ்சலக கட்டண வங்கியின் பங்களிப்பு, அஞ்சல் துறையின் நம்பகதன்மையுடன் கூடிய வீட்டு சேவைகளுக்கான வலையமைப்பு மற்றும் புதிய தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப-செயல்பாடுகள் ஆகியவற்றின் மூலம் மக்களுக்கு ஒப்பிடமுடியாத மதிப்பை வழங்க முடியும்.
ஃபின்க்ளூவேஷன் என்பது இந்திய அஞ்சலகக் கட்டண வங்கியின் நிரந்தர தளமாக இருக்கும். இதில் பங்குபெறும் புதிய தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நிதிசார் நடவடிக்கைகளுக்கு சிறந்த தீர்வுகளை உருவாக்க முடியும். இந்திய அஞ்சலகக் கட்டண வங்கி மற்றும் அஞ்சல்துறை இணைந்து 430 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு அருகிலுள்ள அஞ்சல் அலுவலகம், 400,000-க்கும் மேற்பட்ட நம்பகமான மற்றும் திறமையான அஞ்சல் அலுவலக ஊழியர்கள் மற்றும் கிராமப்புற அஞ்சலக சேவை ஆகியவற்றின் மூலம் அவர்களின் வீடுகளுக்கே சென்று சேவை செய்கின்றன – இது உலகின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான அஞ்சலக இணைப்புகளில் ஒன்றாகும் என்று மத்திய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார்.
ஃபின்க்ளூவேஷன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் பங்கேற்க செய்வதற்குத் தேவையான யோசனைகள், மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
–எஸ்.சதிஸ் சர்மா