நாட்டில் குடிமைப் பணிகள் (சிவில் சர்வீசஸ்) அத்தனை சிறப்பாக இல்லை என்று கவலையுடன் குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு, மாறிவரும் காலங்களில் வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையில், அதிகாரிகள் மட்டத்தில் திறமையை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
குடிமைப் பணிகள் தினத்தையொட்டி ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் மர்ரி சென்னா ரெட்டி மனித வள மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி அதிகாரிகளிடம் இன்று அவர் பேசுகையில், குடிமைப் பணிகளைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக விளக்கினார்.
மக்களின் கவலைகளைப் பொருட்படுத்தாமல் சுரண்டல் காலனித்துவ ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக ஆங்கிலேயர்களால் இந்திய குடிமைப் பணி அமைக்கப்பட்டாலும், இந்திய நிர்வாகப் பணி மக்களுக்காகவும், மக்களுடன் இணைந்து பணியாற்றவும் உருவாக்கப்பட்டது என்று திரு நாயுடு கூறினார்.
சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தைக் குறிப்பிட்டுப் பேசிய திரு நாயுடு, வறுமை, கல்வியறிவின்மை, பாலினம் மற்றும் சமூகப் பாகுபாடு போன்றவற்றை ஒழிப்பதில் இன்னும் பணியாற்ற வேண்டியுள்ளது என்றார். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசு ஊழியர்கள் கடுமையாகப் பாடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், சேவைகளுக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்களை சுயபரிசோதனை செய்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் குடிமைப் பணிகள் தினம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்றார்.
திறம்பட முடிவெடுப்பதற்கும், சேவை வழங்கலை கணிசமாக மேம்படுத்தப்படுவதற்கும் திரு நாயுடு அழைப்பு விடுத்தார். சிறந்து விளங்குபவர்ளை ஊக்குவிப்பது, வெகுமதி அளிப்பது மற்றும் சிவில் சேவைகளில் செயல்திறனை மேம்படுத்துவது ஆகியவற்றின் அவசியத்தை அவர் விரிவாகக் கூறினார்.
அரசு ஊழியர்கள் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்றும், சரியானதை நிலைநிறுத்த வேண்டும் என்றும், அரசியல் நிர்வாகிகளிடம் உண்மையைப் பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நலத்திட்டங்கள் என்ற பெயரில் ‘இலவசங்களுக்கு’ பெரும் செலவினங்களைச் செய்வதன் மூலம் பல மாநிலங்களின் நிதி நிலை குறித்த கவலையை வெளிப்படுத்தும் சமீபத்திய அறிக்கைகளைக் குறிப்பிட்ட திரு நாயுடு, நலன் சார்ந்த அக்கறைகள் மற்றும் வளர்ச்சித் தேவைகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். குறிப்பாக, அத்தகைய அணுகுமுறையின் பின்விளைவுகள் குறித்து அரசியல் நிர்வாகத்திடம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பொறுப்பை ஊழியர்கள் ஏற்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நடைமுறையில் உள்ள செயல்பாட்டு சூழலியலில் அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளும் சில தடைகள் மற்றும் சவால்களை திரு நாயுடு விரிவாகக் கூறினார். சவால்களை எதிர்கொள்ள, சமத்துவம், மன அமைதி, நிதானம், தன்னம்பிக்கை, கருணை மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் அடையுமாறு அதிகாரிகளை திரு நாயுடு வலியுறுத்தினார். தைரியம், பண்பு, திறன், இரக்கம், தோழமை மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றோடு தங்கள் பொறுப்புகளை சிறப்பாகக் கையாளும்படி அவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
–திவாஹர்