புதுதில்லியில் இன்று நடைபெற்ற தேசிய புலனாய்வு முகமை என்ஐஏ –வின் 13-வது ஆண்டு தினக் கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்

புதுதில்லியில் இன்று நடைபெற்ற தேசிய புலனாய்வு முகமை என்ஐஏ–வின் 13-வது ஆண்டு தினக் கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். சிறப்பாக சேவை புரிந்த என்ஐஏ அதிகாரிகளுக்கு இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் விருதுகளை வழங்கினார். உள்துறை இணை அமைச்சர்கள் அஜய் குமார் மிஸ்ரா, நிஷித் பிராமணிக், என்ஐஏ தலைமை இயக்குநர், தில்லி காவல் துறை ஆணையர் மற்றும் என்ஐஏ அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர், என்ஐஏ-வுக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் இது மிகவும் முக்கியமான நாளாகும். உள்நாட்டுப் பாதுகாப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி என்ஐஏ செயல்பட்டு வருவதாகவும், ஆதாரங்களை திரட்டுவதற்கு சிரமமான குற்றங்களை என்ஐஏ புலன் விசாரணை செய்து சிறப்பிடம் பெற்றுள்ளதாகவும் கூறிய அவர், என்ஐஏ குடும்பத்தை முழு மனதுடன் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற வகையில், என்ஐஏ தங்கத் தரத்தை உருவாக்கியுள்ளதாக தம்மால் நிச்சயமாகக் கூறமுடியும் என்று அவர் தெரிவித்தார். பயங்கரவாதம் இல்லாத இந்தியா என்னும் பிரதமரின் குறிக்கோளை எட்டுவதற்கு என்ஐஏ மிக முக்கியமான பங்கை அளித்து வருவதாகவும், 90 சதவீதத்திற்கும் மேல் குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மை அற்ற கொள்கையை நோக்கி முன்னேறி வருவதாக, என்ஐஏ குடும்பத்திற்கு உறுதி அளிக்கத் தாம் விரும்புவதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார். ஒவ்வொரு துறையிலும் இந்தியா வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருவதாகக் கூறிய அவர், இந்தியா இல்லாமல் உலக இலக்குகளை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். எனவே, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு வலுவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

எந்த நாகரீகமான சமுதாயத்திற்கும் பயங்கரவாதம் ஒரு சாபம் என்று குறிப்பிட்ட திரு அமித் ஷா, இந்த சாபத்தால் இந்தியா மிக மோசமான வேதனையை அடைந்துள்ளதாக தெரிவித்தார். பயங்கரவாதத்தைவிட பெரிய மனித உரிமைகள் மீறல் இருக்க முடியாது என்று கூறிய அவர், மனித உரிமைகளைப் பாதுகாக்க பயங்கரவாதத்தை முற்றிலும் வேரறுக்க வேண்டியது அவசியம் என்றார். பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும் தீர்மானத்துடன் என்ஐஏ பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த 7 ஆண்டுகளில் பல கடினமான சூழல்களிலும், என்ஐஏ அற்புதமான பணியை செய்துள்ளதாக கூறிய உள்துறை அமைச்சர், ஜம்மு காஷ்மீர் குறித்து சிறப்பாகக் கூற வேண்டியது அவசியம் என்றார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை வேரறுக்க நாம் விரும்பினால், பயங்கரவாதத்திற்கு நிதி வரும் வழிகளை நாம் அடைக்க வேண்டும் என்று கூறிய அவர், திரு மோடி பிரதமர் ஆனதற்கு பின்பு, ஜம்மு காஷ்மீரில், நிதி வழங்குபவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து என்ஐஏ பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பேருதவி புரிந்துள்ளது என்றார்.

என்ஐஏ கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில், 400-க்கும் மேற்பட்ட வழக்குகள், பதிவு செய்யப்பட்டு 2,494 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 391 பேருக்கு வெற்றிகரமாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். என்ஐஏ மேலும், வலுவடைந்து உலக அளவில் பயங்காரவாத தடுப்பு முகமை என்ற அங்கீகாரத்தை பெறவேண்டும் என்று தாங்கள் விரும்புவதாக அவர் கூறினார்.

என்ஐஏ சட்டம், யுஏபிஏ சட்டம் ஆகியவற்றை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், இந்தியாவிற்கு வெளியே, இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ஐஏ-வுக்கு அந்த வழக்குகளை விசாரிக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்றார். புதிய சட்டத் திருத்தத்தில், ஊடுருவல், வெடிமருந்து கடத்தலைத் தடுக்கவும், இணையவெளிக் குற்றங்களை விசாரிக்கவும், என்ஐஏ-வுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்கள் மற்றும் அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கும் அதிகாரமும் என்ஐஏ-வுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதுவரை 36 பேர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

திவாஹர்

Leave a Reply