கறிக்கோழி பண்ணையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (25.04.2022) வருகை தந்த திண்டுக்கல் மாவட்ட கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் பிராய்லர் கோழி நிறுவனங்களை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் மாநிலச் செயலாளர் ரபீக் பேசுகையில் :-

தமிழகத்தில் உள்ள சுகுணா, சாந்தி, எஸ் கே எம் போன்ற பிராய்லர் ஒருங்கிணைப்பு கமிட்டியிடம் ஒப்பந்த அடிப்படையில் கோழிகளை வளர்க்க வழங்கப்படும் கூலியை விட கூடுதலாக பணம் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என கடந்த 20 தினங்களுக்கு முன்பு தகவல் தெரிவித்தும் இதுவரை அழைக்கப்படவில்லை. தற்போது கறிக்கோழி வளர்க்க கிலோவுக்கு ரூ 6:50 காசுகள் மட்டுமே நிறுவனங்கள் வழங்கி வருகின்றன .

தற்போது விலைவாசி உயர்வு, இடுபொருள் விலை உயர்வு காரணமாக கோழிகளை வளர்க்க முடியவில்லை பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. ஆகவே கறிக்கோழி கிலோ ஒன்றுக்கு 12 ரூபாய் வரை உயர்த்தி தரவேண்டும் என வலியுறுத்தி பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் 20 நாட்களாகியும் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. ஆகவே வருகின்ற 29-ம்தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 20 ஆயிரம் கோழிப் பண்ணைகளில் கோழி குஞ்சுகளை வாங்கி வளர்ப்பது இல்லை என்றும் பண்ணைகளை பூட்டிவிட்டு கோழி நிறுவனங்களிடம் சாவியை ஒப்படைக்க உள்ளோம். இதனால் தமிழகத்தில் பிராய்லர் கோழிக்கான தட்டுப்பாடு ஏற்படும். மேலும் தற்பொழுது மீன்பிடி தடை காலம் என்பதால் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பிராய்லர் கோழி கிடைப்பதில் தட்டுப்பாடு, விலை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

ஆகவே இப்பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசு பிராய்லர் கோழி நிறுவனங்களை சேர்த்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம் தங்களது கோரிக்கையை அரசு ஏற்று பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என தெரிவித்தார்.

டி.எஸ்.ஆர்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply