கல்லூரி பேருந்து மரத்தில் மோதியதில் 26 மாணவிகள் காயமடைந்தனர்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஸ்ரீ எஸ். ராமசாமி நாயுடு நினைவு தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 26 மாணவிகள் காயமடைந்தனர்.

இன்று (06/05/2022) காலை 9 மணி அளவில் ஸ்ரீ எஸ். ராமசாமி நாயுடு நினைவு தனியார் கல்லூரி பேருந்து 63 மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரி நோக்கி ஓ.மேட்டுப்பட்டி அருகே சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்தபோது, கல்லூரிப் பேருந்தின் முன்பக்க “ஆக்சில்” கட்டாகி, பேருந்து; ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த வேப்பமரத்தில் பேருந்து மோதியது. இதில் 26 மாணவிகள் காயமடைந்தனர்.

இந்த விபத்துக் குறித்து அருகில் இருந்த நபர்கள் காவல் துறைக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவிகளை மீட்டு 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பலத்த காயமடைந்த சில மாணவிகளை மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீ எஸ். ராமசாமி நாயுடு நினைவு கல்லூரி, சாத்தூர்.

இந்த விபத்து குறித்து விரிவான தகவல்களை பெறுவதற்காக, ஸ்ரீ எஸ். ராமசாமி நாயுடு நினைவு கல்லூரி நிர்வாகத்தை நாம் தொடர்பு கொண்டோம். ஆனால், இச்சம்பவம் தொடர்பாக அவர்கள் வாய் திறக்க மறுத்து விட்டார்கள்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்லும் இலகுரக மற்றும் கனரக வாகனங்களை அவற்றின் தரம் மற்றும் செயல்பாட்டு திறன் குறித்து சம்ந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் மிக கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். இதில் எந்த சமரசமும் கூடாது.

பாதுகாப்பற்ற மற்றும் தரமற்ற வாகனங்களை சாலை இயக்குவதற்கு எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க கூடாது. இந்தக் கோடை விடுமுறையில் நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி வாகனங்களையும் முழுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

அப்போதுதான் இதுப்போன்ற விபத்துக்களை தடுக்க முடியும்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply