ஆட்கடத்தலை தடுக்கும் விதமாக தன்னார்வ அமைப்புடன் ரயில்வே பாதுகாப்புப் படை புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ஆட்கடத்தலை தடுக்கும் விதமாக ரயில்வே பாதுகாப்புப் படை தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ரயில்வே பாதுகாப்புப்படை தலைமை இயக்குனர் சஞ்சய் சந்தர், கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகளுக்கான அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ரஜினி சிபால் ஆகியோர் இந்த ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர். ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் இரு நிறுவனங்கள் இடையே தகவல் பரிமாற்றம், ஆர்பிஎப் வீரர்கள் மற்றும் ரயில்வே பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், விழிப்புணர்வு மற்றும் குற்ற தடுப்பு செயல்களில் ஒத்துழைப்பு ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் முன்னெடுத்து செல்லும். குழந்தைகள் மீட்பு இயக்கம் எனப் பொருள்படும் `பச்பன் பச்சாவோ அந்தோலன்’, கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகளுக்கான அறக்கட்டளை உடன் இணைந்து 1979 ஆம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே சொத்துக்கள், பயணிகள் பகுதிகள் மற்றும் பயணிகளையும் பாதுகாக்கும் பணியை ஏற்றுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட குழந்தைகள் மீட்பு வழிகாட்டு நெறிமுறைகள்படி உருவான ’சிறிய தேவதைகள்’ என பொருள்படும் ’ஆபரேஷன் நன்னே ஃபரிஷ்டே’ மூலம் 50 ஆயிரம் குழந்தைகளை ரயில்வே பாதுகாப்பு படை மீட்டுள்ளது. மேலும், ரயில்களில் நடைபெறும் குழந்தைக் கடத்தலை தடுக்கும் வகையில், ”ஆப்ரேஷன் ஆஹட்” திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 298 குழந்தைகள் உள்பட 1400 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற ஆட்கடத்தலை தடுக்கும் விதமாக 740க்கும் மேற்பட்ட இடங்களில் ரயில்வே பாதுகாப்புப் படை, ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவை அமைத்துள்ளது. ஆட்கடத்தலை தடுக்கும் வகையில், ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

திவாஹர்

Leave a Reply