பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றித்திரியும் தெரு நாய்களையும், மாடுகளையும் உயிருடன் பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட டவுன் ரயில்வே ஸ்டேஷன், தேவதானம் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிக அளவில் இருந்து வருகிறது. சாலையில் நடந்து செல்லும் மனிதர்களை தெரு நாய்கள் துரத்துவதும், கடிப்பதும் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்ற சமூக ஆர்வலர் இன்று (07/05/2022) காலை 11:13 மணி அளவில் நமது “UTL MEDIA” செய்தி நிறுவனத்திற்கு வாட்சப் மூலம் தகவல் தெரிவித்தார்.

பொதுமக்களின் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி இத்தகவலை திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திற்கு நமது “UTL MEDIA” செய்தி நிறுவனத்தின் இயக்குனரும், நமது ”உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தின் ஆசிரியரும், வெளியீட்டாளருமான டாக்டர் துரை பெஞ்சமின் அவர்கள் தெரிவித்தின் அடிப்படையில், அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்களை இன்று (07/05/2022) மதியம் திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் வலை வீசி உயிருடன் பிடித்து சென்றனர்.

பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக தெருநாய்கள் மட்டுமல்ல; மாடுகளும், குதிரை மற்றும் கழுதை போன்ற பிற கால்நடைகளும் நாடு முழுவதும் அனைத்து சாலைகளிலும் சுற்றித் திரிகின்றன.

எனவே, புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை என்பதை விடுத்து, தெரு நாய்களையும், மாடுகளையும் மற்றும் பிற கால்நடைகளையும் பிடிப்பதற்கு பயிற்சி பெற்ற ஊழியர்கள் தலைமையில் நடமாடும் கண்காணிப்பு குழுக்களை அமைத்து மாடுகளையும் மற்றும் தெரு நாய்களையும் உயிருடன் பிடித்து அவற்றை உரிய முறையில் பராமரிப்பதற்கு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போதுதான் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

-கே.பி.சுகுமார்., B.E.,
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply