திட்டப்பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்பதற்கு, நவீன தொழில்நுட்பம், பொருளாதார சாத்தியக்கூறு, மூலப்பொருட்கள் மற்றும் வலுவான சந்தைப்படுத்துதல் ஆகியவை மிகவும் அவசியம் என மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தின் சாலை பழுதுநீக்கம் இயந்திரம் மற்றும் நடமாடும் குளிர்கலவை மற்றும் சாலை அமைக்கும் இயந்திரத்தை தொடங்கி வைத்து அவர் பேசினார். சாலை அமைக்கும் பணிகளில் கட்டுமான செலவை குறைத்து தரத்தை மேம்படுத்துவது தான் மிகவும் முக்கியமான அம்சம் என்றார். எந்தவொரு தொழில் நுட்பத்திற்கும் காப்புரிமை பதிவு செய்வதோடு அந்த விவகாரம் முடிந்து விடாது என்றும் அவர் குறிப்பிட்டார். காப்புரிமை வணிக மயமாகாமலும், முழுமையாக பயன் படுத்தப்படாமலும் இருந்தால் இதில் தொடர் நடவடிக்கை எடுக்கவேண்டியது சம்பந்தப்பட்ட அமைப்பின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
புதிய நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்த தகவல் தொடர்பு, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை முழுமையாக ஒத்துப்போக வேண்டும் என்றும் திரு.கட்கரி தெரிவித்தார். சாலை அமைக்கும் பணிகளில், எஃகு இரும்பு மற்றும் சிமெண்டுக்கு மாற்றாக புதிய பொருட்களை பயன்படுத்துவது குறித்து முயற்சி மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
–எம்.பிரபாகரன்