வணிகங்களை துன்புறுத்தாமல் நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்க சட்டங்களை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம், ஜவுளி, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற ‘சட்ட அளவீட்டுச் சட்டம், 2009 குறித்த தேசியப் பயிலரங்கில்’ தொடக்க உரையை வழங்கிய திரு கோயல், வணிகங்களுக்கு உகந்த வகையில் சட்டங்களை எளிமையாக்க வேண்டியதன் அவசியத்துடன் நுகர்வோரின் நலனை சமநிலைப்படுத்தும் முயற்சியை ஆதரிக்குமாறு மாநிலங்களை கேட்டுக்கொண்டார்.
“நுகர்வோருக்கு அநீதி இழைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது நமது கூட்டுப் பொறுப்பாகும், அதே நேரத்தில் வணிகர்கள் மீது நமக்கிருக்கும் பொறுப்பை நாம் புரிந்துகொண்டு அவர்கள் நிம்மதியாக பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும்,” என்று அமைச்சர் கூறினார்.
எடைகள் மற்றும் அளவீடுகளின் அளவுத்திருத்தம் செய்யப்படும் இடங்களில் ஏதேனும் தவறு நடந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் உதாரணம் காட்டினார். கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறிய அவர், அனைத்து அளவீட்டு கருவிகளும் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்பட்டு முத்திரையிடப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார்.
–திவாஹர்