சாலை பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு கூட்டாக தீர்வு காண பங்குதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்.

சாலைப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு கூட்டாகத் தீர்வு காண பங்குதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

சேவ்லைஃப் அறக்கட்டளையுடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் / சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சாலைப் பாதுகாப்பு என்பது மிகவும் தீவிரமான பிரச்சினை என்றும், சாலை விபத்துக்களை குறைக்க சமரசம் இன்றி செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

சாலைப் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளித்து 2024-ம் ஆண்டுக்குள்  சாலை விபத்து இறப்புகளை 50%  குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

சாலை பாதுகாப்பை மேம்படுத்த சேவ்லைஃப் அறக்கட்டளை முன்வைத்த பல்வேறு உத்திகள் மற்றும் தீர்வுகளை விரைவில் பரிசீலித்து செயல்படுத்துமாறு மூத்த அதிகாரிகளுக்கு திரு கட்கரி அறிவுறுத்தினார்.

சாலைகளில் விபத்து ஏற்படும் பகுதிகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். நடவடிக்கை எடுக்கும்போது உடனடி நடவடிக்கைகள், இடைக்கால நடவடிக்கைகள், நீண்ட கால நடவடிக்கைகள் என மூன்று விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

பூஜ்ஜிய விபத்துகளுக்கான உறுதிமொழியை அனைத்து பிராந்திய அதிகாரிகள் மற்றும் திட்ட இயக்குநர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply