பிரதமர் நரேந்திர மோதியின் தொலைநோக்கான, தற்சார்பு இந்தியா இலக்கை அடைய, இளைஞர்கள் புதிய தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள், உள்நாட்டிலேயே தயாரித்தலை கடைப்பிடிக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். புனேயில் டாக்டர் டி ஒய் பாட்டீல் வித்யாபீடத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே அவர் உரையாற்றினார். இந்த பல்கலைக்கழகம், மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர் படிப்பு, இயன் மருத்துவம், கண் மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, உயிரி தொழில்நுட்பம், வணிக மேலாண்மை ஆகியவற்றில் பயிற்சி அளித்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜ்நாத் சிங், இளைஞர்கள் தான் நாட்டின் மிகப்பெரிய வலிமை என்றும், எந்த நாட்டையும் மாற்றக்கூடிய கிரியாஊக்கிகளாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும் அவர்கள் திகழ்கின்றனர் என்றும் கூறினார். எந்தவித சவாலையும் எதிர்கொண்டு அதனை வாய்ப்பாக மாற்றக்கூடிய திறமை இளைஞர்களுக்கு உண்டு என்று அவர் தெரிவித்தார். புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து புதிய நிறுவனங்களையும், ஆராய்ச்சி அமைப்புகளையும் உருவாக்கும் ஆற்றல் அவர்களிடம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
தற்சார்பு இந்தியா என்னும் இலக்கை அடைய உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் கொள்முதலை மேற்கொள்ள அரசு உறுதிபூண்டிருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்தியா தனது தேவைகளுக்கு, மற்ற நாடுகளை சார்ந்திருக்கும் நிலையை இது மாற்றும் என அவர் தெரிவித்தார். இளைஞர்களிடம் அரசு நம்பிக்கை வைத்துள்ளது என்றும், அவர்களது முன்னேற்றத்துடன் நாட்டின் முழுமையான வளர்ச்சிக்கு அதிகளவு வாய்ப்புகளை அரசு வழங்குகிறது என்றும் அவர் கூறினார். பிரதமரின், உள்ளூர் உற்பத்திக்கு குரல் கொடுங்கள் என்ற அழைப்பை சுட்டிக்காட்டிய அமைச்சர் நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை இது அதிகரிக்கும் என்றார்.
அரசின் முயற்சிகளால் நாட்டில் எழுச்சிமிகு புத்தொழில் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் இளைஞர்களுக்கு செயல்திறன் மிக்கதாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். யுனிகான் நிறுவனங்களின் எண்ணிக்கை நாட்டில் 100-ஐ கடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
–திவாஹர்