கோவில்பட்டி இரயில் நிலையத்தில் மின் தூக்கிகள் (Electric Lifts), நகரும் படிகட்டுகள் (Escalator) அமைக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை!

தென் தமிழ்நாட்டில் கோவில்பட்டி ஒரு வணிக நகரமாக விளங்குகிறது. நூற்பு ஆலைகள், தீப்பெட்டி தொழிற்சாலை, சிறு குறு தொழில்கள், பருத்தி, கடலை மிட்டாய், மிளகாய், வெள்ளரிக்காய் உள்ளிட்டவைகள் இங்கிருந்து இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டு வருகின்றது. இந்தப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்திய ராணுவப் படையிலும், துணைப் படைகளிலும் பணியாற்றுகின்றார்கள். விளாத்திக்குளம், எட்டையபுரம், ஓட்டப்பிடாரம் பகுதி மக்கள் கோவில்பட்டிக்கு வந்து தான் தொடரிகளில் பயணித்து வருகின்றார்கள்.

ஒவ்வொரு நாளும் கோவில்பட்டி வழியாக முப்பது இரயில்கள் செல்கின்றன. ஆனால், அவற்றில் சில இரயில்கள் கோவில்பட்டியில் நிற்பது இல்லை.

மேலும், இரயில் நிலையத்தின் மறு முனைக்கு செல்லவும், மறுபுறம் இருக்கும் நடைபாதைகளுக்கு செல்லவும் படிகட்டுகளை தான் மக்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றார்கள். சுமைகளுடன் செல்லும் வயதானவர்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் படிகட்டுகளில் ஏறி செல்வது மிகவும் சிரமமாக இருப்பதால், மின் தூக்கி மற்றும் நகரும் படிகட்டுகள் அமைக்க வேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 16.05.2022 அன்று, மேற்கண்ட விவரங்களை சுட்டிக்காட்டி, இது தொடர்பான கோரிக்கை கடிதம் ஒன்றை தென்னக இரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பி வைத்தார்.

கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பொது மேலாளர் 19.05.2022 அன்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோக்கு அனுப்பிய பதிலில், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளார்.

கோவில்பட்டி இரயில் நிலையத்தில் அனைத்து இரயில்களும் நின்று செல்லவும், மின் தூக்கி மற்றும் நகரும் படிகட்டுகள் அமைக்கவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply