பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு பொதுக் குழு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டம் திருவேற்காட்டில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பான தீர்மானத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த 01.01.1998 முதல் பணியாற்றி வரும் ஜி.கே.மணி கடந்த 25 ஆண்டுகளாக கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை சந்தித்த 9 மக்களவைத் தேர்தல்களில் 6 தேர்தல்களையும், 7 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 5 தேர்தல்களையும் ஜி.கே.மணி அவர்கள் தலைமையில் தான் எதிர்கொண்டிருக்கிறது. மிகவும் நெருக்கடியான கால கட்டங்களிலும் கூட பாட்டாளி மக்கள் கட்சி எனும் பெருங்கப்பலை தடுமாறாமல் சிறப்பாக நடத்திச் சென்ற மாலுமி ஜி.கே.மணி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியை 25 ஆண்டுகள் அலங்கரித்த நிலையில், தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த நிலைக்கும், ஆட்சிப் பொறுப்புக்கும் அழைத்து செல்லும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் கட்சித் தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஜி.கே. மணி, கட்சியின் நிறுவனரிடமும், நிர்வாகிகளிடமும் தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக யாரை அமர்த்தலாம் என்று தலைமை நிலைய நிர்வாகிகள் மட்டத்தில் கலந்தாய்வு மேற்கொண்ட போது, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக, தற்போதைய இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் முன்னாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த விருப்பமாகவும், வேண்டுகோளாகவும் இருந்தது.

கே.பி.சுகுமார்

Leave a Reply