சித்த வைத்தியரை கடத்தி பணம் பறிக்க முயற்சி!-கடத்தல் கும்பலை கைது செய்த திண்டுக்கல் போலீசார்!

பரம்பரை சித்த வைத்தியர் தவயோகநாதன்.

இலங்கையை சேர்ந்தவர் தவயோகநாதன் (வயது 65), இவர் கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதியாக தமிழகம் வருகை தந்தார். பின்னர் இந்திய பிரஜையாக மாறி, அவரது பரம்பரை தொழிலான சித்த வைத்தியத்தை திருச்சியில் செய்து வந்தார். மேலும், யூ டியூப் சேனல் மூலம் பிரபலமடைந்தார்.

இந்நிலையில், விருத்தாசலத்தைச் சேர்ந்த சசிதரன் என்வர், திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் அருகே சித்தரேவில் உள்ள தனது பாட்டி உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளார்; அவரை நேரில் வந்து பார்த்து சிகிச்சை அளிக்குமாறு கேட்டுள்ளார்.

இதனையடுத்து கடந்த 27-ம் தேதி பேருந்து மூலம் திண்டுக்கல் வருகை தந்த பரம்பரை சித்த வைத்தியர் தவயோகநாதனை, அய்யம்பாளையம் அருகே உள்ள தோட்டத்து வீட்டிற்கு சசிதரன் மற்றும் அவர் நண்பர்கள் காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து; சசீதரன் மற்றும் 6 பேர் சேர்ந்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். மேலும், அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டை வாங்கி அதிலிருந்து ரூ 25,000 எடுத்துள்ளனர். மேலும், தவயோகநாதனை அவரது செல்போன் மூலம் இலங்கையில் உள்ள அவரது மகன் மற்றும் திருச்சியில் உள்ள வளர்ப்பு மகன் விஜயகுமார் ஆகியோரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள வைத்து; தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், உடனடியாக பணம் ஒன்னரை லட்சம் வேண்டும் என கேட்க வைத்துள்ளனர்.

ஆனால், தவயோகநாதன் பதட்டமாக பேசியதை அறிந்த அவருடைய வளர்ப்பு மகன்; திருச்சியில் உள்ள வீட்டிற்குச் சென்று விசாரித்துள்ளார். அப்போது அவர் திண்டுக்கல்லுக்கு ஒருவருக்கு சிகிச்சை அளிக்க சென்றது தெரியவந்தது. ஏதோ விபரீதம் நடந்ததை அறிந்த விஜயகுமார்; திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர், தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கண்காணிக்க ஆரம்பித்தனர்.

இதனிடையே கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தவயோகநாதனின் வளர்ப்பு மகன் விஜயகுமாரிடம் செல்போன் மூலம் மீண்டும் தொடர்பு கொண்டனர். பணம் தயாராக உள்ளது என்றும்; எங்கு வரவேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். அப்பொழுது கடத்தல் கும்பலைச் சேர்ந்த சசிதரன் பணத்துடன் செம்பட்டி அருகே வருமாறு கூறியுள்ளார். இத்தகவல் உடனே காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சசிதரன் சொன்ன இடத்திற்கு விஜயகுமாருடன் காவல்துறையினர் சென்றனர். அங்கு காவல்துறையினர் மறைந்து கொண்டனர். பணத்தைப் பெறுவதற்காக சம்பவ இடத்திற்கு வந்த சசிதரனை, மறைந்திருந்த காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதனிடையே சசிதரன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் சித்தரேவில் உள்ள தோட்டத்து வீட்டில் இருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த கேசி பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 35), திருப்பூரைச் சேர்ந்த கோபி (வயது 27), நாகப்பட்டினத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 45) மற்றும் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஜெயராமன் (வயது 40) ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓட முற்பட்டனர். இந்நிலையில் ஏற்கனவே அங்கு தயாராக இருந்த தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இதனிடையே கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிய தவயோகிநாதன்; பொதுமக்கள் உதவியுடன் திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். அவர் கொடுத்த எழுத்துப் பூர்வமான புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட சித்தரேவு சேர்ந்த மணி மற்றும் விமல் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

காவல்துறையினரின் துரித நடவடிக்கையின் பேரில் கடத்தப்பட்ட நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

பரம்பரை சித்த வைத்தியர் தவயோகநாதன்.

நாட்டில் எத்தனையோ நபர்கள் இருக்கும்போது,வயதான இந்த பரம்பரை சித்த வைத்தியர் தவயோகநாதனை மட்டும் இவர்கள் கடத்த வேண்டிய அவசியம் என்ன? மேலும், இந்த குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் அனைவரும் வெவ்வேறு மாவட்ட எல்லையை சேர்ந்தவர்கள். அப்படியானால், தவயோகநாதனுக்கும், இவர்களுக்கும் என்ன தொடர்பு?!

காவல்துறைதான் கண்டு பிடிக்க வேண்டும்.

-டி.எஸ்..ஆர்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply