மீன்வளத்துறையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் வளர்ச்சித் திட்டங்கள்!-மத்திய அமைச்சர் டாக்டர். எல். முருகன் தகவல்.

மீன்வளத்துறையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர். எல். முருகன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோதி சிம்லாவில் இன்று தொடங்கிவைத்த ஏழைகள் நல மாநாட்டின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் டாக்டர் முருகன், வளர்ச்சித் திட்டங்களில் ஒன்றாக நாட்டின் முதலாவது கடல்பாசி பூங்கா தமிழகத்தில் உருவாக்கப்பட உள்ளது என்றார். சென்னை காசிமேடு உட்பட நாடு முழுவதும் ஐந்து மீன்பிடி துறைமுகங்கள் சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

மகளிரின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ள மத்திய அரசு விலையில்லா எரிவாயு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் இதன் மூலம் நாடு முழுவதும் எட்டு கோடி குடும்பங்கள் பயனடைந்திருப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், தமிழகத்தில் மட்டும் 32 லட்சம் குடும்பங்கள் விலையில்லா சமையல் எரிவாயு இணைப்பை பெற்றிருப்பதாக கூறினார்.

குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒரு கோடியே 27 லட்சம் குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். பிரதமரின் வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் பேரும் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ் 46 லட்சம் பேரும் தமிழகத்தில் மட்டும் பயனடைந்து இருப்பதாக அமைச்சர் கூறினார்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் இலவசமாக கட்டித்தரப்பட்டதாகவும் தமிழகத்தில் ஒரு கோடியே 27 லட்சம் குடியிருப்புகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். நடைபாதை வியாபாரிகளுக்கான கடனுதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 4 லட்சம் பேர் பயனடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் கடந்த எட்டு ஆண்டுகளில் திரு மோடி தலைமையிலான அரசின் எண்ணற்ற சாதனைகளை மத்திய அமைச்சர் டாக்டர் முருகன் இந்த நிகழ்ச்சியில் பட்டியலிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வெளியிடப்பட்டுள்ள கையேடுகளையும், சாதனை விளக்க புத்தகங்களையும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் திரு.எம்.அண்ணாதுரை அவர்களிடமிருந்து பெற்று அமைச்சர் டாக்டர் எல்.முருகன் அவர்கள் வெளியிட்டார்கள்.

இந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு சுமார் 700-க்கும் மேற்பட்ட திட்டங்களை அறிவித்தும், செயல்படுத்தியும், புத்தாக்கம் செய்தும் உள்ளன. இந்தத் திட்டங்கள் நாட்டு மக்களில் பல்வேறு தரப்பினரை சென்றடைந்துள்ளதுடன் பெரும்பாலானோர் இந்தத் திட்டங்களால் பயனடைந்துள்ளது குறித்து இந்த கையேடுகளில் விளக்கப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசு இந்தத் திட்டங்களின் பலன்கள் 100 சதவீத மக்களை சென்றடைய வேண்டுமென்ற நோக்கில் 8 ஆண்டுகள் சேவை, நல்லாட்சி, ஏழைகள் நலன் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வருவதை உணர்த்தும் விதமாக இந்த கையடக்க பிரதியை வெளியிட்டுள்ளது. இந்தப் பிரதிகள் மத்திய-மாநில அரசுகளின் பல்வேறு அமைப்புகள் வாயிலாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலமாக பொதுமக்கள் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளவும், அவற்றின் பலன்களை பெறவும் இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply