பிரதமர் நரேந்திர மோதி நாளை லக்னோவில் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் நரேந்திர மோதி நாளை உத்தரபிரதேசம் செல்கிறார். லக்னோவில் உள்ள இந்திரா காந்தி அரங்கில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் அடிக்கல் நாட்டுகிறார்.  பிற்பகல் 1.45 மணியளவில் கான்பூரில் உள்ள பராங்க் கிராமத்திற்கு  செல்லும் அவர், குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்துடன்  இணைந்து பத்ரிமாதா மடத்திற்கு செல்லவுள்ளார். பின்னர் 2 மணியளவில் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பவன் செல்லும் பிரதமர், 2.15 மணியளவில் மிலன் கேந்திரா செல்கிறார். குடியரசுத் தலைவரின் மூதாதையர் இல்லமான இந்த மிலன் கேந்திரா பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நன்கொடையாக அளிக்கப்பட்டது. இது தற்போது சமுதாய கூடமாக மாற்றப்பட்டுள்ளது. பின்னர் 2.30 மணியளவில் பராங்க் கிராமத்தில் நடைபெற உள்ள பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் 80 ஆயிரம் கோடி மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை, உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருந்து உற்பத்தி, சுற்றுலா, பாதுகாப்பு, கைத்தறி மற்றும் துணி ஆகிய துறைகளில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் நாட்டின் முன்னணி தொழில் துறை தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-22 ஆகிய தினங்களில் உத்தரபிரதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடைபெற்றது. முதலாவது அடிக்கல் நாட்டு விழா 2018-ஆம் ஆண்டு ஜூலை     29ம் தேதியும், இரண்டாவது அடிக்கல் நாட்டு விழா 2019-ஆம் ஆண்டு  ஜூலை 28-ஆம் தேதியும் நடைபெற்றது. முதலாவது அடிக்கல் நாட்டு விழாவில் 61 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான 81 திட்டங்களுக்கும், இரண்டாவது அடிக்கல் நாட்டு விழாவில் 67 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 290 திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply